

பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இன்னும் தீவிரமாகவும், கடுமையாகவும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வதான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவில் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசிப்பதால் கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் 3.25 லட்சம் பேர் உயிரிழந்ததாக உலக அளவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும் கூட, சிகரெட் புகையை சுவாசிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது.
இங்கிலாந்திலிருந்து வெளிவரும் லான்செட் குழுமத்தின் ஆன்லைன் மருத்துவ இதழான The Lancet Public Health-இல் வெளியாகியுள்ள ஆய்வுக்கட்டுரையில் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசிப்பதால் 2023-ஆம் ஆண்டில் மட்டும் 3 லட்சத்து 25,600 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 1990-ஆம் ஆண்டில் இதே முறையில் ஏற்பட்ட 2 லட்சத்து 17,700 உயிரிழப்புகளுடன் ஒப்பிடும் போது இது 49.56% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்களின் உயிரிழப்பு விகிதல் 61.74 விழுக்காடும், பெண்களின் உயிரிழப்பு 38.35 விழுக்காடும் அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் பிறர் புகைத்து விடும் புகையை சுவாசிக்கும் நிலைக்கு தள்ளப்படுவோரின் எண்ணிக்கை 37.50 கோடியில் இருந்து 44.40 கோடியாக வெறும் 18.40% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், உயிரிழப்போரின் எண்ணிக்கை மட்டும் சுமார் 50% அளவுக்கு அதிகரித்திருப்பது தான் இந்த விவகாரத்தின் தீவிரத்தையும், ஆபத்தையும் உணர்த்தியுள்ளது.
இந்தியாவில் இந்த அளவுக்கு நிலைமை மோசமடைந்திருப்பதற்கு மிக முக்கியக் காரணம் பொது இடங்களில் புகை பிடிப்பது கட்டுப்படுத்தப்படாதது தான். சமூக அக்கறை சிறிதும் இல்லாமல் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் வழக்கம் இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அவ்வாறு புகைப்பவர்கள் வெளியிடும் புகையை சுவாசிக்கும் அப்பாவி மக்கள், குறிப்பாக குழந்தைகளும், பெண்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டும் நோக்கத்துடன் தான், 2004-09 காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த போது, பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தைக் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் நிறைவேற்றி 2008-ஆம் ஆண்டு தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தினேன். அதன்பிறகு தான் திரையரங்குகள், உணவகங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பெண்களும், குழந்தைகளும் பிறர் புகைத்து வெளியிடும் புகையை சுவாசிக்காமல் நடமாடும் ஆரோக்கியமான சூழ்நிலை உருவானது.
பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை இயற்றியது மத்திய அரசு என்றாலும் கூட, அதை நடைமுறைப்படுத்தும் கடமையும், பொறுப்பும் மாநில அரசுகளுக்குத் தான் இருக்கிறது. ஆனால், எந்த மாநிலத்திலும் இந்தச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 02.10.2008 முதல் கடந்த 2024 மார்ச் 31-ஆம் நாள் வரையிலான பதினைந்தரை ஆண்டுகளில் 3.89 லட்சம் பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.6.83 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு வெறும் 68 பேர் மட்டும் தான் பொது இடங்களில் புகைப்பிடித்ததாகக் கூறி அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது; அவர்களில் ஒவ்வொருவரிடமிருந்து சராசரியாக ரூ.177 மட்டும் தான் தண்டமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே இந்தச் சட்டம் எவ்வளவு அலட்சியமாக செயல்படுத்தப்படுகிறது என்பதை உணரலாம்.
2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இப்போது வரையிலான காலத்தில் இந்த சட்டத்தின்படி எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் நடப்பாண்டுக்கான மருத்துவத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் சேர்க்கப்படவில்லை. இதனால், இந்த சட்டத்தின் அடிப்படையில், பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய அரசு விரும்பவில்லையோ என்று தோன்றுகிறது.
நேரடியாக புகைப்பிடிப்பதால் என்னென்ன தீமைகள் ஏற்படுமோ, அவை அனைத்தும் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கும் ஏற்படும் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். சிகரெட் புகையில் கலந்துள்ள நிகோட்டின் என்ற வேதிப்பொருளை உள்ளிழுக்கும் போது, அது மூளைக்கும், இதயத்திற்கும் செல்லும் இரத்த நாளங்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. அதனால், இதய நோய், பக்கவாதம், நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease - COPD), ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்களும் சிகரெட் புகையை மக்கள் சுவாசிப்பதால் ஏற்படுகின்றன. இந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவோர் பெண்களும், குழந்தைகளும் தான்.
பெண்களும், குழந்தைகளும் எந்தத் தவறும் செய்யாதவர்கள். பொதுவெளிகளில் யாரோ சிலர் சட்டவிரோதமாக சிகரெட் புகைத்து வெளியிடும் புகையை சுவாசித்த ஒரே பாவத்திற்காக ஆண்டுக்கு ஒரு லட்சத்து 56,900 பெண்கள் உயிரிழக்கும் கொடுமையை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. எனவே, பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இன்னும் தீவிரமாகவும், கடுமையாகவும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.