பயிர்க்கடன் கட்டாய வசூல் நிறுத்திவைப்பு வரவேற்கத்தக்கது..!- அன்புமணி

புதிதாக பயிர்க்கடன்களை பெற முடியாமல் உழவர்கள் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
Anbumani ramadoss
Published on
Summary

பயிர்க்கடன் கட்டாய வசூல் நிறுத்திவைப்பு வரவேற்கத்தக்கது என்றும், பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களில் அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை போக மீதமுள்ள கடன்தொகையை கட்டாயப்படுத்தி வசூல் செய்யும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி தமிழக அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் நிலுவைத் தொகையை செலுத்த மறுப்பவர்களுக்கு புதிய கடன்களை வழங்க மறுப்பதை ஏற்க முடியாது.

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை முதன்முதலில் மே மாதம் வெளியிட்ட முதலமைச்சர் விஜய் அவர்கள், ரூ.50 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்; அதற்கும் கூடுதலாக பெற்ற கடன்களில் ரூ.25,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியும், உழவர் அமைப்புகளும் இதை ஏற்க மறுத்து, பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதைத் தொடர்ந்து ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும், மற்றவர்களின் கடன் ரூ.35,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் ரூ. 1 லட்சம் வரையிலான கடன்களில் ரூ.75,000 வரையிலும், அதற்கு மேல் மதிப்பு கொண்ட கடன்களில் ரூ.35,000-மும் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை போக மீதமுள்ள கடன்தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று உழவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் கடும் நெருக்கடி கொடுத்து வந்தன.

அதனால், உழவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த நிலையில் தான், மறு உத்தரவு வரும் வரை பயிர்க்கடன் நிலுவைத் தொகையை வசூலிக்கும் நடைமுறைகளை நிறுத்தி வைக்கும்படி கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆணையிட்டிருக்கிறார். இதன் மூலம் விவசாயிகளுக்கு பெரும் நெருக்கடியிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

அதே நேரத்தில், பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கும், தள்ளுபடி செய்யப்பட்ட தொகை போக மீதமுள்ள நிலுவைத் தொகையை செலுத்தியவர்களுக்கும் மட்டுமே புதிய கடன்கள் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், புதிதாக பயிர்க்கடன்களை பெற முடியாமல் உழவர்கள் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சம்பா மற்றும் தாளடி பருவம் தொடங்கியுள்ள நிலையில், அதற்கான செலவுக்கு பணம் இல்லாததால் சாகுபடி செய்ய முடியாமல் ஏராளமான விவசாயிகள் முடங்கிக் கிடக்கின்றனர். விவசாயிகளுக்கு நன்மை செய்வதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த த.வெ.க., உழவர்களை விவசாயம் செய்ய முடியாமல் முடக்கி வைத்திருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உழவர்களின் இந்த நிலைக்கு அவர்கள் எந்த வகையிலும் காரணமல்ல. மாறாக, ஆட்சியாளர்களின் இரட்டை நிலைப்பாடு தான் உழவர்களின் துயரத்திற்கு காரணம் ஆகும். 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உழவர்களின் பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அந்த வாக்குறுதியை தவெக அரசு முழுமையாக நிறைவேற்றியிருந்தால் உழவர்களுக்கு பயிர்க்கடன் என்ற ஒன்றே இருந்திருக்காது; புதிதாக கடன் வாங்க முடியாமலும், அதனால் விவசாயம் செய்ய முடியாமலும் முடங்கும் நிலை ஏற்பட்டிருக்காது.

தமிழ்நாட்டில் 2025&ஆம் ஆண்டு திசம்பர் 31&ஆம் தேதி வரை மொத்தம் ரூ.15,108 கோடி அளவுக்கு கூட்டுறவு பயிர்க்கடன்கள் நிலுவையில் உள்ளன. அதன் பின் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படும் வரை புதிய கடன்கள் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் ஓரளவு பயிர்க்கடனை விவசாயிகள் திருப்பி செலுத்தியிருப்பார்கள் என்பதால், ஒட்டுமொத்தமாகவே தள்ளுபடி செய்யப்பட வேண்டிய கடன் ரூ.15 ஆயிரம் கோடிக்கும் குறைவாகவே இருக்கும்.

3 கட்டங்களாக தமிழக அரசு வெளியிட்ட கடன் தள்ளுபடி அறிவிப்புகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.6,800 கோடி ஆகும். அதை விட கூடுதலாக இன்னும் ஒரு மடங்கு தொகையை ஒதுக்கீடு செய்தால் உழவர்களின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து, கடன் சுமையிலிருந்து முழுமையாக தள்ளுபடி செய்திருக்க முடியும். இப்போதும் அதற்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன.

பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் வழங்க கர்நாடக அரசு தவறியதாலும் நடப்பாண்டில் வழக்கமான அளவில் மூன்றில் ஒரு பங்கு பரப்பளவில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டது. சம்பா சாகுபடிக்கு தேவையான அளவு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் சம்பா சாகுபடியும் கேள்விக்குறி ஆகியுள்ளது. இதனால் உழவர்களுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில். அவர்களின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வது தான் அவர்களுக்கு அளிக்கப்படும் நிவாரணம் ஆகும்.

எனவே, தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தவாறு, கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் வாங்கி நிலுவையில் உள்ள பயிர்க்கடன்கள் முழுவதையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் சம்பா சாகுபடி செய்ய உழவர்களுக்கு தேவையான கடன்களையும் நிபந்தனையின்றி வழங்க கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com