அம்பத்தூர் அருகே தாய் கண்முன்பு லாரி மோதி மகள் பலி

விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அம்பத்தூர் அருகே தாய் கண்முன்பு லாரி மோதி மகள் பலி
Published on: 
Summary

சாலையை சீரமைக்கவும், போக்குவரத்து சரி செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மாதவரம் அடுத்த மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவரது மகள் ரூபிகா(வயது 13). மாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு ஐஸ்வர்யா தனது மகளுடன் சென்று பாடியில் உள்ள வணிக வளாகத்தில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க மொபட்டில் சென்றார். பின்னர் தாயும், மகளும் மொபட்டில் வீடு நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

கள்ளிக்குப்பம்

இரவு 7 மணி அளவில் அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் அருகே உள்ள வாட்டர் கெனால் சாலை வழியாக வந்தபோது குண்டும் குழியுமான சாலையால் தடுமாறிய ஜஸ்வர்யா தனது மகள் ரூபிகாவுடன் மொபட்டோடு சாலையில் விழுந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் தாயின் கண்முன்பே மகள் ரூபிகா லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து

இதனை கண்டு தாய் ஐஸ்வர்யா கதறி துடித்தது பார்ப்போர் நெஞ்சை கலங்க வைத்தது. விபத்து நடந்ததும் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து பலியான ரூபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அம்பத்தூர் வாட்டர் கெனாள் சாலையில் இருந்து கள்ளிக்குப்பம் வரை சாலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதியில் தினந்தோறும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலை போலீசார் கண்டு கொள்ளாததால் அங்குள்ள ஆட்டோ டிரைவர் மற்றும் பொது மக்களே தினமும் போக்கு வரத்தை சரி செய்து வருவதாக கூறப்படுகிறது. சாலையை சீரமைக்கவும், போக்கு வரத்து சரி செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

X