தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்ததாக குற்றச்சாட்டு: மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் தவெக புகார்!

உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசுவதை இன்னும் நிறுத்தவில்லை.
 Minister Aadav Arjuna
Published on: 
Summary

தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்யும் வகையில் பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுகவில் இருந்து தவெகவிற்கு மாறிய சத்யபாமாவை விமர்சிக்கும் போது, "இந்த உருவத்தை வைத்துக்கொண்டு சத்யபாமா எப்படி பல்டி அடித்தார்?" என்று கூறியிருந்தார். இப்பேச்சு அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு

இப்பேச்சைக் கண்டித்து, தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்த தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகார் மனுவை அளித்தார். அதில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவை உருவக்கேலி செய்யும் வகையில் கொச்சை வார்த்தைகளை பயன்படுத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நன்னடத்தை விதிகளை மீறியதற்காக மு.க.ஸ்டாலின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அவரது தேர்தல் பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திமுக தலைவர்கள் மீது சாடல்

புகார் அளிக்கப்பட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, திமுக தலைவர்களின் அரசியல் அணுகுமுறையைக் கடுமையாகச் சாடினார். தவெக தொடர் வெற்றிகளைப் பெற்று வருவதால் எழுந்த பொறாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார். திமுக தலைவர்கள் தொடர்ச்சியாக பெண்களை மையப்படுத்தி, உடல் சார்ந்த இழிசொற்களையும் கொச்சையான வார்த்தைகளையும் பேசி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசுவதை இன்னும் நிறுத்தவில்லை. சொந்த அமைச்சர்களின் தாயாரைப் பற்றி திமுகவினர் கொச்சையாகப் பேசியபோது கூட மு.க.ஸ்டாலின் அமைதியாக வேடிக்கை பார்த்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் திமுகவினர் இதேபோன்றுதான் உருவக்கேலி செய்தனர். கொளத்தூர் தொகுதி பெண் வாக்காளர்கள் மு.க.ஸ்டாலினை நிராகரித்த பின்னரும் அவர் இன்னும் பாடம் கற்கவில்லை.

ஆணாதிக்க சிந்தனை கொண்ட தலைவர்கள் அதிகம் நிறைந்துள்ள திமுக, பெண்களை இழிவுபடுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். தவெக வேட்பாளர் சத்யபாமாவிடம் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவர் மீது விரைவில் கிரிமினல் வழக்குகளும் சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளும் தொடரப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com