

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணி என இரண்டாக பிரிந்தது. இதனை தொடர்ந்து சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க. கொறடா உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணி த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தது. மேலும் 4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து த.வெ.க. வில் இணைந்துள்ளனர். இதனால் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பை உள்ளிட்ட தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியினர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதில் சி.வி.சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது நிலைப்பாடு குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலர் இன்று தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் இன்று பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து இணைய உள்ளதாக கூறப்படுகிறது.