அடையாறில் இன்று பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை

பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தை பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள்.
அடையாறில் இன்று பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை
Published on: 
Summary

கொலையுண்ட ரவுடி மைத்ரேயனின் செல்போன் நம்பரை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை அடையாறு இந்திரா நகர் மெயின் ரோட்டில் இன்று காலை 11.30 மணி அளவில் வாலிபர் ஒருவரை மர்ம கும்பல் வழி மறித்து திடீரென தாக்குதலில் ஈடுபட்டது. அவர்களது கையில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதைப்பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

ஓட ஓடி விரட்டி

இதையடுத்து ஆயுதங்களுடன் விரட்டிய நபர்கள் வாலிபரை விடாமல் துரத்தி சென்றனர். ஓட ஓடி விரட்டி வெட்டி அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தை பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள். கொலை சம்பவத்தை துணிச்சலாக அரங்கேற்றி விட்டு கொலையாளிகள் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்கள்.

ரவுடி

இது பற்றி தகவல் கிடைத்ததும் அடையாறு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் பெயர் மைத்ரேயன் என்பதும், அவர் சி பிரிவு ரவுடி என்பதும் தெரியவந்தது.

மயிலாப்பூரை சேர்ந்த அவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அரசு ஆஸ்பத்திரி

மைத்ரேயனின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார் என்பது உடனடியாக தெரியவில்லை. அவர்களை கண்டுபிடித்து கைது செய்வதற்கு தீவிர நடவடிக்கைகளை போலீசார் மேற் கொண்டுள்ளனர்.

கேமரா காட்சிகள்

கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையுண்ட ரவுடி மைத்ரேயனின் செல்போன் நம்பரை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மைத்ரேயனுக்கு எதிரிகள் யாரும் இருக்கிறார்களா? என்பதை பற்றிய தகவல்களையும் போலீசார் திரட்டி வருகிறார்கள்.

தகராறு

மைத்ரேயனுக்கு யாருடனாவது தகராறு இருந்து வந்திருக்கலாம் என்றும் அதன் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் யார்? என்பது பற்றிய விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. கொலையாளிகளை பிடிப்பதற்காக தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த கொலை சம்பவம் அடையாறு பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com