

சென்னையில் 14 முன்பதிவு மையங்கள் மூலம் சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு தொடங்கியது. 4 நாட்கள் விடுமுறை காரணமாக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வமாக உள்ளனர். ரெயில்களுக்கும் முன்பதிவு தொடங்கி, சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.
ஆயுத பூஜையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை இருப்பதால் சென்னை உள்ளிட்ட வெளி ஊர்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
நாளை மறுநாள் சனிக்கிழமை முதல் வருகிற 20 -ந்தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை முதல் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பஸ் மற்றும் ரெயில்களில் பயணம் செய்வதற்கு ஆயத்தமாகி உள்ளனர்.
ஆயுத பூஜையையொட்டி தமிழகம் முழுவதும் 14,963 சிறப்பு பஸ்களை இயக்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பு வெளியிட்டது. சென்னையில் இருந்து 6,199 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் செய்து கொள்ளலாம் என தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று முதல் வருகிற 18-ந்தேதி வரை முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
கிளாம்பாக்கத்தில் 10 முன்பதிவு மையங்களும், கோயம்பேடு பஸ் நிலையத்தில் 2 முன்பதிவு மையங்களும், மறைமலைநகர் தற்காலிக பஸ் நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 14 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்கள் அனைத்திலும் இன்று காலையில் நேரடி முன்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்லும் ஆர்வத்தில் முன்பதிவு மையங்களுக்கு நேரில் சென்று தாங்கள் செல்லும் ஊர்களுக்கான டிக்கெட்டுகளை போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, சென்னையில் இருந்து இயக்கப்படும் 6199 பஸ்களின் இருக்கைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது என்றார்.
இதேபோன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாகவும் இதற்காக அந்தந்த பகுதிகளில் முன்பதிவு மையங்கள் மூலமாக பொதுமக்கள் இன்று தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக டிக்கெட்டுகளை எடுத்து உள்ளனர்.
ஆயுதபூஜையையொட்டி சிறப்பு ரெயில்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. சென்ட்ரல்-கோவை போத்தனூர், தாம்பரம்- செங்கோட்டை, ஈரோடு- நெல்லை, நெல்லை- தாம்பரம், சென்ட்ரல்- கொல்லம் என பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.
இப்படி சிறப்பு ரெயில்களில் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று, காத்திருப்பு பட்டியல் காண்பித்த போதிலும் கடைசி நேரத்தில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டுவிடும் என்கிற நம்பிக்கையில் அந்த டிக்கெட்டுகளையும் எடுத்து வைத்து உள்ளனர்.
தொடர் விடுமுறை காரணமாக நாளை முதல் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வதால் ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் ஆகியவற்றில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
பயணிகள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் வகையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.