

பாலக்கோடு தக்காளி மார்க்கெட் பைபாஸ் சாலையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதால், பொதுமக்கள் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி மாணவர்கள், முதியோர் உள்ளிட்டோர் அச்சத்துடன் சாலை கடக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் முன்புள்ள புறவழிச்சாலை மற்றும் நகருக்குள் செல்லும் நெடுஞ்சாலை பிரிவில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவு விபத்துகள் நடந்து வருகிறது. பாலக்கோடு புறவழிச்சாலை பிரிவு, தக்காளி மார்க்கெட், மின்சார வாரியம், அரசு பள்ளிகள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலை கடந்து செல்லும் நிலையில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.
இப்பகுதியில் அதிவேகத்தில் ஊருக்குள் நுழையும் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், சொகுசு கார்கள் இருசக்கர வாகனத்தில் பயணிப்பர் உள்ளிட்ட அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இப்பிரிவு சாலையில் வேகத்தடை இல்லாததால் தாறுமாறாக வளைவில் முந்தி செல்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள், முதியோர், விவசாயிகள் உள்ளிட்ட ஒரு பகுதியை கடக்கும்போது மிகவும் அச்சத்துக்குள் ஆகிறார்கள்.
இப்பகுதியில் இருபுறங்களிலும் வேகத்தடை அமைக்க பலமுறை நெடுஞ்சாலை துறையிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதியில் விரிவான வேகத்தடை உடனடியாக அமைத்து பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் விபத்து ஏற்படாதவாறு இருபுறமும் வேகத்தடை அமைத்து தருமாறு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.