

மாநகர பஸ் மோதி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோழவரம் அடுத்த பெரிய காலனி அசோக் தெருவில் வசிப்பவர் குமார், இவரது மனைவி சாவித்திரி (வயது49).
கடந்த சில நாட்களாக சாவித்திரிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ரெட்டேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக சாவித்திரியை கணவர் குமார் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
கதிர்வேடு அருகே சென்று கொண்டிருந்த போது, செங்குன்றத்தில் இருந்து பெரம்பூர் நோக்கி சென்ற மாநகர பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சாவித்திரி பஸ்சின் சக்கரத்தில் சிக்கி கணவர் கண்முன்பே பரிதாபமாக இறந்தார்.
குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்ததும் கொளத்தூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து சாவித்திரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ராமானுஜத்திடம் விசாரணை நடத்தினர்.