பட்டாசு வெடித்தபோது விபரீதம் - சிறுவன் வயிற்றில் சிக்கிய எவர்சில்வர் துண்டு அகற்றம்

பட்டாசு வெடித்ததில் டம்ளர் சிதறி, அதன் சிறிய உலோகத்துண்டு சிறுவனின் அடிவயிற்றில் பாய்ந்து காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
எவர்சில்வர் துண்டு
Published on: 
Summary

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பட்டாசுகளை மிகவும் கவனத்துடனும், பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றியும் வெடிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

தீபாவளி பண்டிகை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுவன். இந்தநிலையில் தீபாவளி அன்று அந்த சிறுவன் நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து விளையாடியுள்ளார். அப்போது எவர்சில்வர் டம்ளரை கவிழ்த்து வைத்து, அதன் அடியில் பட்டாசை வைத்து வெடிக்கச் செய்துள்ளார்.

வயிற்றில் புகுந்தது

இதில் எதிர்பாராதவிதமாக பலத்த சத்தத்துடன் பட்டாசு வெடித்ததில் டம்ளர் சிதறி, அதன் சிறிய உலோகத்துண்டு சிறுவனின் அடிவயிற்றில் பாய்ந்து காயத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக சிறுவன் காரைக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் மேற்கொண்ட ஆரம்ப கட்டப் பரிசோதனையில் உள்காயம் இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, உடனடியாக ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், எவர்சில்வர் டம்ளரின் சிறிய துண்டு வயிற்றுப் பகுதியைக் கிழித்துக்கொண்டு, குடல் வழியாகச் சென்று முதுகுத்தண்டுவடத்திற்கு அருகில் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது.

அறுவை சிகிச்சை

சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க, உடனடியாக குடல் அறுவை சிகிச்சை நிபுணர் வரவழைக்கப்பட்டு, சுமார் நான்கு மணி நேரம் தீவிர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் வயிற்றுப் பகுதியில் சிக்கியிருந்த எவர்சில்வர் துண்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

டாக்டர்கள் எச்சரிக்கை

தற்போது சிறுவன் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பட்டாசுகளை மிகவும் கவனத்துடனும், பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றியும் வெடிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

X