சேலம் அருகே டாரஸ் லாரியில் கார் மோதி 3 வாலிபர்கள் பலி

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அருகே டாரஸ் லாரியில் கார் மோதி 3 வாலிபர்கள் பலி
Published on: 
Summary

கார் இரவு 9.30 மணி அளவில் சேலம்- கோவை நெடுஞ்சாலையில் உள்ள அரியானூர் தனியார் மருத்துவமனை எதிரே உள்ள பாலத்தில் அதிவேகமாக சென்றபோது முன்னால் சிமெண்ட் லோடு ஏற்றிக் கொண்டு சென்ற டாரஸ் லாரியின் பின்பகுதியில் கார் திடீெரன மோதியது.

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா பூலாம்பட்டி கிராமம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 41).

நேற்று இரவு முருகனுக்கு சொந்தமான காரில் சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் அரவிந்த் (30) என்பவர் அம்மாபேட்டையில் இருந்து முருகனை அழைத்துக் கொண்டு அவரை பூலாம்பட்டியில் உள்ள வீட்டில் விடுவதற்காக ஓட்டிச் சென்றார்.

அவருடன் காரில் முருகன், சேலம் ஜங்சன் பகுதியை சேர்ந்த நந்தகோபால் என்பவரின் மகன் கார்த்தி (35) மற்றும் சேலம் டவுன் பட்டகோவில் பகுதியை சேர்ந்த மணி மகன் விக்ரம் (29) ஆகியோர் இருந்தனர்.

சிமெண்ட் லாரி மீது மோதியது

கார் இரவு 9.30 மணி அளவில் சேலம்- கோவை நெடுஞ்சாலையில் உள்ள அரியானூர் தனியார் மருத்துவமனை எதிரே உள்ள பாலத்தில் அதிவேகமாக சென்றபோது முன்னால் சிமெண்ட் லோடு ஏற்றிக் கொண்டு சென்ற டாரஸ் லாரியின் பின்பகுதியில் கார் திடீெரன மோதியது.

இந்த பயங்கர விபத்தில் காரில் இருந்த வாலிபர் விக்ரமுக்கு இரு முழங்கைகளில் எலும்பு முறிவு, நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. முருகனுக்கு மார்பிலும், கார்த்தி என்பவருக்கு தலையின் முன்பகுதியிலும், பின்பகுதியிலும், அரவிந்த்துக்கு நெற்றி மற்றும் தலையின் பின்பகுதியிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

அடுத்தடுத்து 3 பேர் பலி

இதையடுத்து அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் விக்ரம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்ற வந்த முருகன், கார்த்தி ஆகியோர் இன்று காலை அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். அரவிந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com