சென்ட்ரல்-அரக்கோணம் இடையே ஏ.சி. புறநகர் ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது: பயணிகள் உற்சாகம்

தெற்கு ரெயில்வேயின் உயர் அதிகாரிகள், ஆவடி மற்றும் அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் உடனிருந்து ரெயிலின் இயக்கத்தைக் கண்காணித்தனர்.
ஏ.சி. புறநகர் ரெயில்
Published on: 
Summary

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே ஏ.சி. புறநகர் ரெயில் சேவை இன்று தொடங்கியது. 2 மாத சோதனை அடிப்படையில் இயக்கப்படும் இந்த ரெயில், பயணிகளின் வரவேற்பு மற்றும் தெற்கு ரெயில்வே ஆய்வின் பின்னர் நிரந்தரமாக்கப்படும்.

சென்னை புறநகர் ரெயில் பயணிகள் வசதிக்காக கடந்த ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி சென்னை- செங்கல்பட்டு வழித்தடத்தில் முதல் முறையாக ஏ.சி.ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏ.சி.மின்சார ரெயில்

இந்த ரெயிலுக்கு பயணிகள் இடையே வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தற்போது சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் இடையே முதன் முதலாக ஏ.சி. ரெயில் அறிமுகம் செய்யப்பட்டு இன்று காலை ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

இந்த ரெயில் சேவை ஒரு நிரந்தரச் சேவையாக அல்லாமல் இன்று முதல் டிசம்பர் 24-ந்தேதி வரை 2 மாத காலத்திற்கு ஒரு சோதனை அடிப்படையிலான இயக்கமாகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2 மாத சோதனை ஓட்டத்திற்குப் பிறகு பயணிகளின் வரவேற்பு மற்றும் தெற்கு ரெயில்வேயின் ஆய்வறிக்கையைப் பொறுத்தே, இந்த ரெயிலை நிரந்தரமாக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்ட்ரல் வந்தது

தொடக்க நாளான இன்று இந்த ரெயில் ஆவடியில் இருந்து காலை 6:30 மணிக்கு புறப்பட்டு காலை 7:45 மணிக்கு அரக்கோணம் சென்றடைந்தது. பின்னர் அரக்கோணத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு காலை 9:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைந்தது. பின்பு சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9:40 மணிக்கு புறப்பட்டு காலை 10:25 மணிக்கு மீண்டும் ஆவடி சென்றடைந்தது.

தெற்கு ரெயில்வேயின் உயர் அதிகாரிகள், ஆவடி மற்றும் அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் உடனிருந்து ரெயிலின் இயக்கத்தைக் கண்காணித்தனர்.

சாதாரண மின்சார ரெயில்களில் பயன்படுத்தும் வழக்கமான பயணச்சீட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகள் இந்த ஏ.சி. ரெயிலுக்குச் செல்லாது. இதற்கென ரெயில் நிலையக் கவுண்டர்களில் தனி ஏ.சி. புறநகர் ரெயில் டிக்கெட்டுகள் கேட்டு எடுக்க வேண்டும்.

வாரத்தில் 5 நாட்கள்

இந்த ரெயில் வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் இயக்கப்படும். இது 12 பெட்டிகள் கொண்ட ஏ.சி. மின்சார ரெயிலாகும். ரெயில் தொடக்க நாளான இன்று வழக்கமான சீசன் டிக்கெட் வைத்துள்ளவர்கள், சாதாரண டிக்கெட் வைத்திருந்த அனைவரும் கூடுதல் கட்டணமின்றி உற்சாகமாக பயணம் செய்தனர். நாளை சனிக்கிழமை என்பதால் வருகிற திங்கட்கிழமை முதல் ஏ.சி. ரெயிலுக்கான கட்டணத்தில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயிலில் கட்டணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி, பெரம்பூர், பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், வில்லிவாக்கம் வரை ரூ.35-ம், கொரட்டூர், பட்டரைவாக்கம் வரை ரூ.40-ம், அதன் பின்னர் அம்பத்தூர், திருமுல்லைவாயில், அண்ணனூர், ஆவடி, இந்து கல்லூரி, பட்டாபிராம்வரை ரூ.60-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தொடர்ந்து நெமிலிச்சேரி, திருநின்றவூர், வேப்பந்தட்டு, செவ்வாப்பேட்டை ரோடு, புட்லூர் வரை ரூ.85-ம், பின்னர் திருவள்ளூருக்கு ரூ.90-ம், அதையடுத்து ஈகாட்டூருக்கு ரூ.185-ம், கடம்பத்தூருக்கு ரூ.200-ம், செஞ்சி பானம்பாக்கம், மனவூருக்கு ரூ.205-ம், திருவாலங்காடு, மோசூருக்கு ரூ.215-ம், புளியமங்கலம், அரக்கோணத்துக்கு ரூ.230-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஏ.சி. ரெயிலில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com