

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இளைஞர் கவின் செல்வ கணேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர்கள் மீதான குற்றப்பத்திரிக்கையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.
குற்றப்பத்திரிக்கையை எதிர்த்து இருவர் தாக்கல் செய்த மனுக்கள் மீது உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கவின் ஆணவப்படுகொலை வழக்கில், குற்றவாளிகளான சுர்ஜித் தந்தை, தாய் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கவின் பெற்றோர்கள் காத்திருப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பவின் பெற்றோர் கூறுகையில்,
நாங்கள் இவ்வளவு போராடியது எல்லாம் எங்கே, கடைசியில் இது ஆணவப்படுகொலை இல்லை என்றே கூறப்போகிறார்களா? எந்த சட்டத்தை வைத்து அவர்களை விடுதலை செய்தார்கள் என்று எங்களுக்கு தெரிய வேண்டும்.
நாங்கள் நீதி மட்டுமே ஜெயிக்கும் என்று நினைத்திருந்தோம் என்று ஆதங்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின், கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி திருநெல்வேலி கே.டி.சி. நகரில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய காதலியின் குடும்பத்தினர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசாரால் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இந்தக் கொலை வழக்கில் சுர்ஜித், அவரது பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி, அவர்களது உறவினர் ஜெயபால் ஆகிய நால்வரும் சந்தேக நபர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தங்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்யுமாறு குற்றவாளிகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.
மனுதாரர்களின் பங்கு குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் விசாரணை நீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணையைத் தொடரலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.