

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், அதற்கு முன்தினம், மறுநாள் கடல்நீர் உள்வாங்குவது வழக்கமான நிகழ்வாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் ஆடி அமாவாசையான இன்று காலையில் கடல் 80 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. ஆனால் சிறிது நேரத்தில் கடல் மீண்டும் இயல்பாக காணப்பட்டது.
ஆடி மாத அமாவாசையான இன்று அதிகாலையில் இருந்து ஏராளமானவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் பக்தர்கள் திரண்டனர். அவர்கள் கடலில் புனித நீராடி கடற்கரையில் அந்தணர்கள் மூலம் எள், தண்ணீர் வைத்தும் சிலர் பிண்டம் வைத்தும் தர்ப்பணம் செய்து பின்னர் சுப்பிரமணிய சுவாமியை வழிபாடு செய்தனர்.
இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமானவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடந்தது.