தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சிக்கு சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம்: கிரடாய் வலியுறுத்தல்

குறைந்த விலையிலான வீட்டு வசதித் திட்டங்களை சாத்தியமாக்க அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று கிரடாய் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 TamilNadus economic
Published on: 
Summary

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகரித்து வரும் விமானப் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, இரண்டாவது விமான நிலையம் அமைவதற்கான இடத் தேர்வுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு நிர்ணயித்திருக்கும் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை வெற்றிகரமாக அடைவதற்கு, தலைநகர் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் உடனடியாக அமைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரடாய் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச வர்த்தகம், முதலீடுகள் மற்றும் தொழில் வளர்ச்சியை பெருக்க விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால், இந்தத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகரித்து வரும் விமானப் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, இரண்டாவது விமான நிலையம் அமைவதற்கான இடத் தேர்வுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசு தரப்பிலிருந்து மாற்று இடங்கள் குறித்த இறுதி முடிவை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று கிரடாய் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே, அப்பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில் வளர்ச்சி சீராக மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கிரடாய் அமைப்பின் தமிழக தலைவர் ஹபீப், நடுத்தர மக்களின் சொந்த வீடு வாங்கும் கனவை நனவாக்கும் வகையில் குறைந்த விலையில் வீடுகளைக் கட்டித் தருவதே கட்டுமான நிறுவனங்களின் முதன்மை நோக்கமாக உள்ளது என்று தெரிவித்தார். இருப்பினும், தற்போதைய சூழலில் பல்வேறு வகையான வரி விதிப்புகள் காரணமாக குறைந்த விலையில் வீடுகளை விற்பனை செய்வது நடைமுறைச் சாத்தியமற்றதாக மாறிவிட்டதாக அவர் கவலை தெரிவித்தார்.

குறைந்த விலையிலான வீட்டு வசதித் திட்டங்களை சாத்தியமாக்க அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று கிரடாய் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசு தனது வரிவிதிப்புக் கொள்கைகளில் உரிய கவனம் செலுத்தி வரிகளைக் குறைத்தால் மட்டுமே, சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் எளிதில் வாங்கும் விலையில் தரமான வீடுகளை வழங்கிட முடியும் என்று அவர் மேலும் விளக்கமளித்தார். உள்கட்டமைப்பு மேம்பாடும், வரிச்சலுகைகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் கட்டுமானத் துறையும் சமமான வளர்ச்சியைப் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com