

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீது, தற்போது 8-ஆவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமி ஒருவர் அளித்த புகார் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர்மீது 8வது வழக்கைப் பதிவு செய்துள்ளது சிறப்பு புலனாய்வுக் குழு.
இதுவரை மொத்தம் 12 சிறுமிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் வீரமணி மற்றும் வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிற குற்றவாளிகள்மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
விசாரணை விரைவில் நிறைவடைய உள்ளதாகவும், இறுதி அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்குடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் பொருட்டு, 5 நபர்களுக்கு எதிராக சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் (Look Out Circular - LOC) பிறப்பித்துள்ளது.
இவர்கள் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அனைத்து சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, வீரமணியின் மகள் அர்ச்சனா சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடு செல்ல முயன்றபோது சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க வீரமணி தரப்பிலிருந்து செய்யப்பட்ட பணப்பரிவர்த்தனைகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, வீரமணி, அவரது பெண் கூட்டாளி மற்றும் அவரது கணவர் மகேந்திரசிம்ஹன் ஆகியோர் கடந்த ஆகஸ்டில் கைது செய்யப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக வீடியோ ஒன்றை வைத்திருந்தும் அதை காவல்துறையிடம் ஒப்படைக்காத கணேஷ் என்பவர் செப்.22ம் தேதி கைது செய்யப்பட்டார்.
வீரமணிக்கு சிறுமிகளை அழைத்து வந்து குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த அவரது ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் லாசர், பார்த்திபன் மற்றும் பாபு ஆகிய மூன்று பேரும் அக்டோபர் 5 கைது செய்யப்பட்டனர்.
வீரமணியின் மேலாளர் சக்திவேல் என்பவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்குகள் தொடர்பாக இதுவரை மொத்தமாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.