

இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக உயிர் காக்கும் 7 லட்சத்து 50 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது ராமநாதபுரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடல் பரப்பில் இலங்கை மிக அருகாமையில் இருப்பதால் தங்கம், போதைப் பொருட்கள், வலி நிவாரணி மாத்திரைகள், பீடி இலைகள் உள்ளிட்டவை கடத்தல் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனை கடலோர காவல் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் தடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலோர காவல் நிலைய போலீசார் நேற்று இரவு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சாத்தகோண் வலசை ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தை ஓட்டி வந்தவர் திடீரென்று அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
அவரை துரத்தி சென்று பிடித்த போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், அவரது பெயர் தவ நாகேஸ்வரன் என்றும், பனைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது வாகனத்தில் இலங்கைக்கு படகு மூலம் கடத்திச் செல்வதற்காக வலி நிவாரணி மாத்திரைகள் அடங்கிய பெட்டிகள் இருப்பதாகவும் சோகையன்தோப்பு கடற்கரைக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சரக்கு வாகனத்தில் இருந்த பண்டல்களை சோதனை செய்த போது பத்து அட்டைப்பெட்டியில் ஒரு அட்டைப்பெட்டிக்கு 75 ஆயிரம் மாத்திரைகள் வீதம் ஏழு லட்சத்து 50 ஆயிரம் மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரை மேல் நடவடிக்கைக்காக மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக மண்டபம் கடலோர காவல் போலீசார் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக உயிர் காக்கும் 7 லட்சத்து 50 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது ராமநாதபுரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.