

சென்னையில் நடைபாதைகளில் வசித்து வந்த 66 பேர் மீட்கப்பட்டு காப்பகங்களில் சேர்க்கப்பட்டனர்.
சென்னையில் சேப்பாக்கம் மைதானம் மற்றும் பீட்டர்ஸ் சாலை அருகே நடைபாதைகளில் வசித்து வந்த 23 குழந்தைகள் உட்பட 66 வீடற்றவர்கள் மீட்கப்பட்டு காப்பகங்களுக்கு அனுப்பட்டனர்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சென்னை மாநகராட்சி அவர்களை காப்பகங்களுக்கு அனுப்பியது.
மீட்கப்பட்ட 17 குடும்பங்களை சேர்ந்த 66 பேரில் 23 குழந்தைகள், 18 ஆண்கள் 25 பெண்கள் அடங்குவர். இதில் 2 வார குழந்தை முதல் 60 வயதுடையவர்களும் அடங்குவர். மேலும் அவர்களில் 25 வயது மாற்றுத்திறனாளி ஒருவரும் அடங்குவார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்காக அந்த குடும்பங்கள் அவர்களின் உடைமைகளுடன் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சேப்பாக்கம் பாலத்திற்கு அருகே அந்தக் குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்ததாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்ணா சதுக்கத்திற்கு அருகிலுள்ள காலி நிலத்தில் 33 அறை கொண்ட தங்குமிடங்களை மாநகராட்சி கட்டியுள்ளது. அவற்றில் 26 அந்த குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அறையிலும் ஒரு விளக்கு, ஒரு மின்விசிறி மற்றும் ஒரு அலமாரி உள்ளன. தனித் தனி கழிவறை மற்றும் ஆர்ஓ வசதியுடன் கூடிய குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “குடும்பங்களுக்குத் தனிப்பட்ட சுதந்திரம் அளிக்கும் வகையில் ஒவ்வொரு அறையும் கட்டப்பட்டுள்ளது. அவர்களின் மறுவாழ்வை நாங்கள் கவனித்துக்கொள்வோம்” என்றார்.
இதுதவிர்த்து நரிகுரவர் சமூகத்தை சேர்ந்த மொத்தம் 18 பேரை உள்ளடக்கிய மேலும் ஏழு குடும்பங்கள் மெரினாவில் உள்ள மாநகராட்சி நரிக்குறவர் இரவு தங்குமிடத்திற்கு அனுப்பட்டனர்.
மீட்புப் பணிகள் தொடரும் என்று மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்தார்.
இது ஒரு தொடர்ச்சியான நடவடிக்கையாகவும், நகரின் வீடற்ற மக்களுக்கான மறுவாழ்வுத் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.
நேற்று முன் தினம் (சனிக்கிழமை) உலக வீடற்றோர் தினம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.