கடையில் இருந்த 600 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

கொள்ளை கும்பல் அங்கிருந்து சென்றதும் கூச்சல் போட்ட காவலாளியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு குவிந்தனர்.
கடையில் இருந்த 600 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
Published on: 
Summary

ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (58). இவர் அந்த பகுதியில் வெள்ளி பொருட்கள் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். பட்டறையில் தயாரிக்கும் வெள்ளி பொருட்களை அங்குள்ள தனக்கு சொந்தமான வீட்டில் உள்ள கடையில் வைத்து விற்பனை செய்து வந்தார். மேலும் பட்டறையில் தயாரிக்கும் வெள்ளி பொருட்களை அந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் இருப்பும் வைத்து குடோனாகவும் பயன்படுத்தி வந்தார்.

முகமூடி கும்பல்

இந்த நிலையில் வழக்கம் போல நேற்றிரவு வெள்ளி பொருட்கள் கடையில் விற்பனையை முடித்து விட்டு இரவு 10 மணியளவில் கடை உரிமையாளரான பாலசுப்பிரமணி மற்றும் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். காவலாளி வெங்கடேஷ் (60) மட்டும் கடைக்கு முன்பு இரவு பணியில் இருந்தார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் முகமூடி அணிந்த படி 4 பேர் கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்த காவலாளி வெங்கடேசை சராமாரியாக இரும்பு ராடால் தாக்கினர். இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்ட நிலையில் கயிற்றால் அவரை கட்டி போட்டனர். சத்தம் போட்டால் கொன்று விடுவதாக அவரை மிரட்டினர்.

பின் வழியாக சென்ற கும்பல்

தொடர்ந்து அந்த கட்டிடத்தின் பின் பக்க மேல் மாடி வழியாக கொள்ளை கும்பல் 4 பேரும் கடைக்குள் சென்றனர். அலமாரியில் இருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் வெள்ளி கட்டிகளையும் மின்னல் வேகத்தில் எடுத்து சாக்கு மூட்டைகளில் கட்டினர்.

மேலும் அங்குள்ள குடோனில் இருந்த வெள்ளி கட்டிகளையும் அந்த கும்பல் எடுத்தது. அனைத்து பொருட்களையும் சாக்கு மூட்டைகளில் கட்டிய அந்த கும்பல் அதனை தாங்கள் வந்த காரில் ஏற்றி விட்டு சில நிமிடங்களில் அங்கிருந்து தப்பி சென்றது.

கொள்ளை கும்பல் அங்கிருந்து சென்றதும் கூச்சல் போட்ட காவலாளியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

600 கிலோ வெள்ளி கொள்ளை

பின்னர் அவர்கள் கடையின் உரிமையாளரான பாலசுப்பிரமணிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற அவர் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் வெள்ளி கட்டிகள் என 600 கிலோ வெள்ளி பொருட்கள் மாயமாகி இருந்தது. மேலும் அந்த கட்டிடத்திற்குள் இருந்த சில கேமராக்கள் உடைக்கப்பட்டு பதிவுகளை சேமிக்கும் கருவிகளையும் அந்த கும்பல் எடுத்து சென்றது.

போலீசார்

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனருக்கும் தகவல் தெரிவித்தார். உடனே மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி. பாபு மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

தொடர்ந்து கொள்ளை சம்பவம் குறித்து காவலாளி மற்றும் அந்த பகுதியினரிடம் விசாரித்தனர். அப்போது காவலாளியை தன்னை தாக்கி கட்டி போட்டு விட்டு 4 பேர் கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். அவர் கூறிய அடையாளங்களை வைத்து இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கை ரேகை நிபுணர்கள்

தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் அங்கு விரைந்து வந்து பதிவாகி இருந்த கைரகைகளை பதிவு செய்து பழைய கொள்ளையர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். ஆனால் கொள்ளையர்களின் உருவம் முழுவதும் பதிவாக வில்லை என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

5 தனிப்படை

சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com