

வங்கக்கடலில் கடந்த 29ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை புயலாக வலுப்பெற்று, சென்னைக்கு தென்கிழக்கே 420 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயலுக்கு முரசு என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை காலை மத்திய-மேற்கு வங்கக் கடலில் தீவிர சூறாவளி புயலாக வலுப்பெறும். புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அந்த வகையில், சென்னையின் எழும்பூர், புரசைவாக்கம், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், தி.நகர், சேப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.