100 நாளில் 546 குற்றச் சம்பவங்கள்: திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்

விஜய் தலைமையிலான த.வெ.க.-வின் 100 நாள் ஆட்சி குறித்து பரந்தாமன் விமர்சனம் செய்துள்ளார்.
பரந்தாமன்
பரந்தாமன்
Published on

திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

த.வெ.க. அரசு பொறுப்பேற்றபோது ‘இட்ஸ் எ பிகினிங் ஆஃப் ஏ நியூ எரா’ என்று சொன்னார். உண்மைதான், இது ஒரு நியூ எரா—100 நாளில் 546 குற்றச் சம்பவங்களைச் செய்த ஒரு நியூ எரா!. இன்னைக்கு விஜய்யினுடைய சர்க்கஸ் சர்க்கார் ஆட்சியின் சாதனை இது. 'பெண்கள் பாதுகாப்பு ரொம்ப நான் ஸ்ட்ரிக்ட்டா வச்சிருப்பேன்'னு சொன்னார். ஆனால், இன்னைக்கு பெண்களுக்கான பாதுகாப்பு எந்த அளவில் தமிழ்நாட்டில் இருக்கின்றது என நாட்டு மக்களுக்கே நன்றாகத் தெரியும். தவெக கட்சியில் இருக்கக்கூடிய பெண்களுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத ஒரு பலவீனமான சர்க்காராகத்தான் இது.

கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது, விற்கப்படுகிறது

போதை கலாச்சாரத்திலிருந்து நம்ம பசங்களை மீட்கணும், அவங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்குனு சொன்னார். ஆனால் போதை பழக்கமும் கடத்தலும் இங்க தீவிரமாக இருக்கிறது. கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது, விற்கப்படுகிறது என்று காவல்துறைக்குத் தகவல் கொடுத்த கோவை கல்லூரி மாணவன் அமுதனுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத வெட்கக்கேடான சர்க்கஸ் சர்க்கார் அரசுதான் இந்த விஜய்யின் அரசு.

காவல்துறையைக் கையில் வச்சிருக்கக்கூடிய முதலமைச்சர். 'ஜென்-ஜி' பிள்ளைகள் எல்லாம் உங்களுக்கு ஆர்வமாக வாக்களித்தார்களே, இந்த முதலமைச்சருக்கு, இன்னைக்கு 'ஜென்-ஜி'கள் மட்டும் ஏறத்தாழ 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்றைக்குக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த கொலைப் பழியை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இந்த 100 நாளில் பல குற்றச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்திருக்கு. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி 546 குற்றச் சம்பவங்கள் இருக்கு. இந்த ஒரு வாரத்தில் மட்டும் நடந்த குற்றங்களின் எண்ணிக்கையை எடுத்துக்கிட்டீங்களா?

கோவையில் போதைப்பொருளைப் பற்றித் தகவல் கொடுத்ததாகச் சொல்லி, அமுதன் என்கிற மாணவனை அடித்துக் கொன்றுள்ளனர். அந்த மாணவன் போதை பொருள் பற்றி கொடுத்த தகவலை காவல்துறையே போதை கும்பலிடம் கொடுத்துள்ளது. ஆனால் சட்டமன்றத்தில் அமைச்சர் என்ன சொல்றாரு? 'இரு கோஷ்டிகளுக்கு இடையேயான மோதல்'னு சொல்லிட்டு வழக்கின் தன்மையை திசைதிருப்புறார்.

நான் கேட்கிறேன் முதலமைச்சர் அவர்களே, இளைஞர்களுக்கான அரசு' என்று நீங்கள் மார்தட்டிக் கொள்கிறீர்கள். இளைஞர்கள் மூலமாகவே ஆட்சிக்கு வந்தேன் என்று சொல்லுகிற நீங்கள், ஒரு இளைஞன் குற்றம் நடைபெறுகிறது என்று காவல்துறைக்குச் சொன்ன ரகசியத்தைக் காப்பாற்றாத காவல்துறை—அப்படிப்பட்ட காவல்துறை வைத்திருக்கும் உங்களுக்கு முதலமைச்சராக இருப்பதற்கு கொஞ்சமாவது தகுதி இருக்கிறதா என்ற கேள்வியைத்தான் உங்களை நோக்கி நான் கேட்கிறேன்.

அமுதனுடைய தாயார் சொல்லுகிறார்கள், அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று சொல்லுகிறார்கள் என்றால், ஆளுகிற அரசின் மீது இந்த நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை! எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திமுக மீதுதான் நம்பிக்கை இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

இரண்டு அமைச்சர்களை ஓட விட்டிருக்கிறார்கள்

நேற்றைக்கு திருவொற்றியூரில் இரண்டு அமைச்சர்களை (ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன்) ஓடவிட்டிருக்கிறார்கள். இந்த 100 நாள் சாதனை என்னவென்று சொன்னால், அமைச்சர்களை தலைதெறிக்க ஓட வைத்ததுதான் இந்த 100 நாள் சாதனை. இதே மாதிரி தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்றதை தட்டிக் கேட்ட பையனை அம்மிக்கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செஞ்சிருக்காங்க. திருவெறும்பூரில் இரண்டு தவெக காரங்க ஒருத்தரை வெட்டிக் கொலை பண்ணியிருக்காங்க.

விருதுநகரில் ஒரு பள்ளிப் பெண்ணைத் துன்புறுத்தியதைத் தட்டிக் கேட்ட அப்பாவை வெட்டிக் கொன்றிருக்காங்க. காஞ்சிபுரத்தில் கோயில் திருவிழாவில் இரண்டு இளைஞர்களை வெட்டிக் கொன்றிருக்காங்க. திருப்பூர்ல காதலை மறுத்த பெண்ணைக் கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அந்த அம்மாவையும் இளைஞர்களையும் கொன்றிருக்காங்க. ஈரோட்டில் ஃபேன்சி ஸ்டோருக்குள் புகுந்து ஒரு பெண்ணைக் கத்தியால் குத்தியிருக்காங்க. இதெல்லாம் கடந்த ஒரு வாரத்தில் நடந்த குற்றச் சம்பவங்கள்.

அம்பத்தூர் புதூரில் ஆட்டோவில் ஒரு பெண்ணை உட்கார வச்சு கழுத்தை அறுத்து ரோட்டில் வீசியிருக்காங்க. இந்த மாதிரியான குற்றச் சம்பவங்கள் எல்லாம் இதற்கு முன்னாடி நடந்ததே இல்லை. சினிமா படத்தில் வருகிற மாதிரியான கொலைக் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். கும்மிடிப்பூண்டியில் 17 வயசு இளைஞனைக் கொன்று கல்லறை மேல போட்டு, சில கொலைச் சம்பவங்களைச் செய்து ரீல்ஸ் எடுத்து வெளியிடுகிறார்கள். இதெல்லாம் எந்தக் கலாச்சாரத்தைக் காட்டுகிறது?

ஒரு திரைத்துறையிலிருந்து வந்தவர் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர். அதனுடைய விளைவு என்னவென்றால், நீங்கள் திரைப்படத்தில் ஹீரோவாக இருக்கலாம், நடித்த ஹீரோயிசத்தைப் பார்த்து இன்னைக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள் இதைச் செய்கிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கிறீர்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.

வேலூரில் தலைமைப் பெண் காவலர் கொலை

வேலூரில் தலைமைப் பெண் காவலரையே குத்திக் கொன்றிருக்கிறார்கள். இதைவிட என்ன கேவலம் இருக்கு? வெட்கமாக இல்லை முதலமைச்சருக்கு? காவல்துறையைத் தன் கையில் வச்சிருக்கக்கூடிய முதலமைச்சர், காவல்துறையிடம் தகவலைக் கொடுக்கும் பையனைக் காப்பாற்றுவதற்கு வக்கில்லை இந்த காவல்துறைக்கு. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் கைதின் போது, சாலைகளில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இளைஞரைப் பார்த்து இரண்டு கையை வைத்து அடிப்பார் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ். எந்தக் காவல் ஆணையர் ஒரு கைது நடவடிக்கைக்கு ஸ்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள்? இருக்கிற வேலையை விட்டுவிட்டு வேறு வேலையை நீங்கள் செய்வதனால்தான் இந்த குற்றச் சம்பவங்கள் நடக்கிறது.

கோயம்புத்தூரில் இதே மாதிரி நகைக்காக ஒரு வயதான பெண்ணைக் கொன்றிருக்கிறார்கள். இந்த ஆட்சியில் பச்சிளம் குழந்தையிலிருந்து பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். நான் ஆட்சிக்கு வந்தா சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றுவேன்'னு சொன்னாரே, இதான் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றும் லட்சணமா?.

இந்த 100 நாள் ஆட்சி மக்களுக்கான சர்க்கார் அல்ல, வெறும் சர்க்கஸ் சர்க்கார்! நாளுக்கு நாள் நாசமாகும் தமிழ்நாடு இது. இந்த 100 நாட்களில் செய்ததெல்லாம் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. விலைவாசி பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை என எதையும் சரிசெய்ய முடியாமல் பல்லிளிக்குது இந்த 100 நாள் ஆட்சி.

இவ்வாறு பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com