

சேலத்தில் தொடர்ச்சியாக குற்றங்களில் ஈடுபட்ட 40 ரவுடிகள் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசார் 250 வீடுகளில் விசாரணை நடத்தி, தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் கடந்த தீபாவளி பண்டிகை நாளில் 15-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் ரவுடிகளை கைது செய்ய டி.ஜி.பி. அலுவலகம் உத்தரவிட்டு உள்ளது.
இதையடுத்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி. பாபு உத்தரவின் பேரில் கடந்த 2 நாட்களாக சேலம் மாநகரில் உள்ள ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விசாரணை நடத்தினர். இதில் தற்போது குற்றத்தில் ஈடுபட்டு வந்த ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
அந்த வகையில் ஆட்டையாம்பட்டி, காரிப்பட்டி, கிச்சிப்பாளையம், டவுன், அன்னதானப்பட்டி, அழகாபுரம் என மாநகர் முழுவதும் 250 பேர்கள் வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 30 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல சேலம் புறநகர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் உத்தரவின் பேரில் ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி உள்பட மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் 160 ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 10 ரவுடிகளை கைது செய்த போலீசார் அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் பொதுஇடங்களில் மது குடித்த 49 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோர்ட்டில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கடந்த 2 நாட்களில் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டிய 136 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.