

ரேக்ளா போட்டிகள் நடத்தப்படுவதை போலீசாருடன் இணைந்து கால்நடை மருத்துவத்துறையினரும் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை தென்சங்கம்பாளையம் அடுத்த சோமந்துறை பிரிவில் ரேக்ளா பந்தயம்போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் ஆனைமலை, வேட்டைக்காரன்பு தூர், நெகமம், கிணத்துக்கடவு மற்றும் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்கள், கேரளம் மாநிலம் கொழிஞ்சாம் பாறை, சித்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 350-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகளில் இளைஞர்கள் பங்கேற்றனர். 200 மீட்டர், 300 மீட்டர் என 2 பிரிவுகளில் நடத்தப்பட்ட ரேக்ளா பேட்டியில் காங்கேயம், லம்பாடி இன காளைகள் பங்கேற்றன.
ரேக்ளா போட்டியில் இரு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு இருசக்கர வாகனமும், 2-வது இடம் பிடித்தவர்களுக்கு ரூ.35 ஆயிரம், 3-வது இடம் பிடித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் 50-வது இடம் வரை பிடித்தவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.
முன்னதாக காளைகளை துன்புறுத்தக்கூடாது, தார் முள்ளால் குத்தக்கூடாது, மின்அதிர்ச்சி அளிக்கக்கூடாது என்பவை உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் போலீசார் ரேக்ளா ரேஸ் போட்டிக்கு அனுமதி அளித்து இருந்தனர்.
மேலும் ரேக்ளா போட்டிகள் நடத்தப்படுவதை போலீசாருடன் இணைந்து கால்நடை மருத்துவத்துறையினரும் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ரேக்ளா போட்டியில் இலக்கு நோக்கி சீறி பாய்ந்த காளைகளை, சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.