வீடு முன்பு விளையாடிய சிறுவன் கடத்தல்- போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

நேற்றிரவு முதல் இன்று காலை வரை தேடியும் ரிதனை கண்டுபிடிக்க முடியவில்லை. வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமான சம்பவம் காங்கயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் ரிதன்
சிறுவன் ரிதன்
Published on

காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஏ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30), லாரி டிரைவர். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 3½ வயதில் ரிதன் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் மஞ்சுளா தனது மகன் ரிதனுடன் அதே பகுதியில் உள்ள அவரது தோழி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மாலை அவர்களது வீட்டிற்கு செல்ல ஆயத்தமானபோது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ரிதன் திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா அவர்களது உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை தேடி உள்ளார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சிறுவன் மாயமான சம்பவம் குறித்து காங்கேயம் போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து அங்கு வந்த காங்கேயம் டி.எஸ்.பி., முத்துகுமரன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் அங்குள்ள அனைத்து வீடுகள், வீட்டு மொட்டைமாடி, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட பல இடங்களில் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் தேடுவதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருடன் இணைந்து காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் 3 மணி நேரத்துக்கு மேலாக ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

நேற்றிரவு முதல் இன்று காலை வரை தேடியும் ரிதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் எங்கு சென்றான், யாராவது அவனை கடத்தி சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கயம் டி.எஸ்.பி., முத்துகுமரன், இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கயம் ஏ.சி.நகர் பகுதியில் உள்ள கிணறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் ரிதன் கிடைக்காததால் அவனை மர்மநபர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமான சம்பவம் காங்கயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com