

பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 சாதாரண படகுகளும் திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய 2 அதிநவீன சொகுசு படகுகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.
இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வருகின்றனர்.
அவர்கள் படகில் சென்று 3 இடங்களையும் பார்த்து வருகிறார்கள். அவர்கள் செல்ல தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.
இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 சாதாரண படகுகளும் திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய 2 அதிநவீன சொகுசு படகுகளும் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவெளியின்றி தொடர்ச்சியாக இந்த 5 படகுகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கடந்த 3 நாட்களில் மட்டும் 27 ஆயிரத்து 533 பேர் படகு மூலம் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு திரும்பி உள்ளனர். தீபாவளிக்கு முதல் நாளான கடந்த 7-ந்தேதி 6 ஆயிரத்து 889 பேரும், தீபாவளி பண்டிகை நாளில் 9 ஆயிரத்து 800 பேரும், நேற்று 10 ஆயிரத்து 844 பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு உள்ளனர்.