வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் கிடைத்தது எப்படி?- கைதானவர்களிடம் தீவிர விசாரணை

கைது செய்யப்பட்ட சதீஷ், ராகுல் ஆகியோர் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.களக்காடு, திருக்குறுங்குடி, பணகுடி பகுதிகளை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை வனத்துறை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைதான 2 பேரையும், அவர்களை பிடித்த வனத்துறையினரையும் காணலாம்.
கைதான 2 பேரையும், அவர்களை பிடித்த வனத்துறையினரையும் காணலாம்.
Published on

களக்காடு:

களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில், திருக்குறுங்குடி வனசரகர் யோகேஷ்வரன் தலைமையில் வனத்துறை தனிப்படையினர் பரிவரிசூரியன் பீட், கரும்பாறை சரகம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த சதீஷ்(வயது 42), ராகுல்(23) ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். உடனே அவர்கள் 2 பேரிடமும் வனத்துறையினர் விசாரித்தனர். அதில் அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை பழத்தில் மறைத்து வீசியது தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 3 நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷ், ராகுல் ஆகியோர் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக களக்காடு, திருக்குறுங்குடி, பணகுடி பகுதிகளை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை வனத்துறை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே அந்த கும்பலுக்கு நாட்டு வெடிகுண்டுகள் எப்படி கிடைத்தது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து வனசரகர் யோகேஷ்வரன் கூறுகையில், 'வன உயிரினங்களை வேட்டையாடுவது, கறிகளை விற்பனை செய்வது, அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைவது, வனத்தில் தீ வைப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது வன பாதுகாப்பு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய கும்பல் குறித்து தகவல் கிடைத்தால் பொதுமக்கள் களக்காடு துணை இயக்குனர் அலுவலகத்திலோ, திருக்குறுங்குடி வனசரகர் அலுவலகத்திலோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும்' என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com