180 கோவில்களில், ஒரே நாளில் 1,200 திருமணம்- உறவினர்கள் திரண்டதால் பக்தர்கள் திணறல்

கோவிலில் நடைபெற்ற திருமணம்
கோவிலில் நடைபெற்ற திருமணம்
Published on
Summary

ஆவணி மாத முதல் முகூர்த்த நாளான நேற்று 180 கோவில்களில் ஒரே நாளில் 1,200 திருமணங்கள் நடந்தன. உறவினர்கள் ஏராளமானோர் திரண்டதால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் திணறினர்.

ஆவணி மாத முதல் முகூர்த்தம்

ஆவணி மாதம் பிறந்து முதல் முகூர்த்த நாள் நேற்று வந்தது. இதனையொட்டி தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் திருமணங்கள் நடந்தன.

இதனால் கோவில்களில் மணமக்கள், அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் குவிந்ததால் கோவில்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

வடபழனி முருகன்

சென்னை வடபழனி முருகன் கோவிலில் காலை முதலே மணமக்கள் வருகையும், திருமண சடங்குகளும் நடந்தன. மணமக்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டபங்களில் திருமணம் முடிந்ததும், மூலவர் தரிசனமும் செய்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் மணமக்களின் பெற்றோர். உறவினர்கள், நண்பர்கள் என கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

திருத்தணி-திருப்பரங்குன்றம்

முருகனின் 5-வது படை வீடான திருத்தணி கோவிலில் 30 திருமணங்கள் நடந்தன. இதேபோல் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் நேற்று 101 திருமணங்கள் நடந்தது.

கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ஒரே நாளில் 136 திருமணங்கள் நடந்தன.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 50 திருமணங்களும், பழனி திருஆவினன்குடி கோவிலில் 64 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது.

திருச்சி வயலூர் முருகன் கோவிலில் 60 திருமணங்களும், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சுமார் 50 திருமணங்களும் நடைபெற்றுள்ளன. சுவாமிமலை முருகன் கோவிலில் நேற்று 35 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 51 ஜோடிகளுக்கும் திருமணம் நடந்தது. சேலம் சுகவனேசுவரர் கோவிலில் 100 ஜோடிகளுக்கும், வாழப்பாடி பேளூர் தானதோன்றஸ்வரர் கோவிலில் 64 ஜோடிகளுக்கும், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் 61 ஜோடிகளுக்கும் என சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 279 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 108 திருமணங்களும் நடந்துள்ளன.

விடுமுறை நாள்

இதேபோல் வடபழனி மற்றும் குன்றத்தூர் போன்ற பிரபல முருகன் கோவில்களில் முகூர்த்த நாட்களில் அதிக அளவிலான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வடபழனி கோவிலில் 61 திருமணங்களும், குன்றத்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் 60 திருமணங்கள், திருப்போரூர் கந்தசாமி கோவிலில் 75 திருமணங்கள் நடந்தன.

1,200 திருமணங்கள்

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் உள்ள 11 மண்டலங்களுக்கு உட்பட்ட 180 முக்கிய கோவில்களில் நேற்று 1,200 திருமணங்கள் நடந்துள்ளன. இதன்மூலம், ரூ.13 லட்சத்து 98 ஆயிரத்து 527 வருவாயாக பெறப்பட்டது' என்றார்.

கோவில்களில் திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதனால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபங்கள் களைகட்டின.

குருவாயூர் கோவிலில்...

கேரளம் மாநிலம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் ஆவணி மாதத்தில் அதிக ஜோடிகளுக்கு திருமணம் நடப்பது வழக்கம்.

கடந்த 8.9.2024-ந்தேதி 334 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. ஆவணி மாத முகூர்த்த நாளான நேற்று 437 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com