டாஸ்மாக் மதுக்கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்பனைக்கு தடை

மதுவிலக்கு மற்றும் கலால் ஆணையர் டாஸ்மாக் நிறுவனத்திற்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்தார்.
TASMAC
Published on

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் மதுபான உற்பத்தி நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை தெற்கு மண்டல அலுவலக அதிகாரிகள் கடந்த 11ம் தேதி ஆய்வு செய்தனர்.

அப்போது செயற்கை சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களின் விற்பனையை உடனடியாக நிறுத்த டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கே.நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்," டாஸ்மாக் மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்கள் மற்றும் கிடங்கு மேலாளர்கள், மறு அறிவிப்பு வரும் வரை, சில்லறை விற்பனைக் கடைகளில் 11 வகைகளின் விற்பனையை நிறுத்தவும், மேலும் எப்.எல். 2 மற்றும் எப்.எல். 3 உரிமதாரர்களுக்கு அவற்றின் விற்பனையை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் கீழ் வி.எஸ்.ஓ.பி. எக்சா கோல்ட் பிராந்தி, லூயிஸ் வெர்னன்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்தி, மெக்டொவல்ஸ் வி.எஸ்.ஓ.பி. பிராந்தி, நம்பர் 1 மெக்டொவல்ஸ் பைன் பிராந்தி, மென்ஸ்கிளப் டீலக்ஸ் பிராந்தி, ஹனி பீ பைன் பிராந்தி, என்ரிகா வி.எஸ்.ஓ.பி. செலக்ட் பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்.ஓ. பிராந்தி, என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி மற்றும் என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் ஆகிய 11 ரகங்கள் வருகின்றன.

இவற்றின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அடையாளம் நுகர்வோருக்கு விற்கக் கூடாது எனவும் உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது.

இது தொடர்பான வழிகாட்டுதல்களை மதுவிலக்கு மற்றும் கலால் ஆணையர் டாஸ்மாக் நிறுவனத்திற்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com