திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை ஒரே நாளில் 102 ஜோடிகள் திருமணம் செய்ய பதிவு

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முதல் திருமணம் செய்யக்கூடியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு முன்பே திருமண பதிவு செய்யப்பட வேண்டும்.
திருப்பரங்குன்றம் கோவில்
திருப்பரங்குன்றம் கோவில்
Published on
Summary

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை ஒரே நாளில் திருமணம் செய்ய 102 ஜோடிகள் பதிவு செய்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் கோவில்

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலில் மட்டும் தான் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் திருமணக் கோலத்தில் காட்சிதருகிறார். இந்த கோவிலில் தங்களது திருமணம் நடந்தால் சகல பாக்கியமும் கிடைக்கும் என்று பக்தர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. இதனால் இந்த கோவிலில் முகூர்த்த நாளில் சராசரியாக 50 முதல் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு மேல் திருமணம் நடக்கிறது.

102 ஜோடிகள் பதிவு

இந்தநிலையில் ஆவணி மாதத்தின் முதல் வளர்பிறை முகூர்த்த நாளான கடந்த 23-ந்தேதி அன்று ஒரே நாளில் 104 ஜோடிகளுக்கு பதிவு திருமணம் நடந்தது. இந்தநிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 17-ந்தேதி ஆகிய 2 நாட்கள் வளர்பிறை முகூர்த்தமாகும். நாளை ஒரே நாளில் மட்டும் திருமணம் செய்ய 102 ஜோடிகள் பதிவு செய்துள்ளனர். வருகின்ற 17-ந்தேதிக்கு நேற்று வரை 52 ஜோடிகளுக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.

ரூ.4.59 லட்சம் வருமானம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முதல் திருமணம் செய்யக்கூடியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு முன்பே திருமண பதிவு செய்யப்பட வேண்டும். கோவிலின் திருவாட்சி மண்டப வளாகத்தில் முத்துக்குமாரசுவாமி-தெய்வானை அம்பாள் சன்னதியில் திருமணம் செய்கிறார்கள். இதனை தொடர்ந்து கோவில் கருவறைக்கு மணமக்கள் உள்ளிட்ட 20 பேருக்கு அனுமதி டிக்கெட் மற்றும் திருமண பதிவு கட்டணம் என்று ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தலா ரூ.4,500 வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாளை ஒரே நாளில் 102 ஜோடிகள் திருமணம் செய்ய பதிவு செய்யப்பட்டதில் கோவிலுக்கு ரூ.4 லட்சத்து 59 ஆயிரம் வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com