கேரளத்துக்கு காரில் கடத்திய 1,000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

காரை ஓட்டி வந்தவர் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
கேரளத்துக்கு காரில் கடத்திய 1,000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
Published on: 
Summary

ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் பொதுமக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படும் ரேசன் அரிசி கேரளத்துக்கு கடத்தப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்க காவல் துறையினரும், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரேசன் அரிசி

இருந்தபோதிலும் கேரளத்தை ஒட்டியுள்ள குமரி உள்ளிட்ட மாவட்ட எல்லைகள் வழியாக ரேசன் அரிசி டன் கணக்கில் கடத்தப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தநிலையில் குமரி மாவட்டம் ஈத்தாமொழி மருத்துவமனை சாலை வழியாக சொகுசு காரில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

சொகுசு கார்

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ்பாபு தலைமையிலான போலீசார் ஈத்தாமொழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்று போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

போலீசார்

இதனால் காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காண்பித்தனர். ஆனால் காரை ஓட்டி வந்த நபர் நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார், அந்த காரை தங்களது வாகனத்தில் துரத்திச் சென்றனர். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்ற போலீசார், மருத்துவமனை சாலை பகுதியில் அந்த காரை மடக்கிப் பிடித்தனர்.

இருப்பினும் காரை ஓட்டி வந்தவர் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து போலீசார் அந்த சொகுசு காரை சோதனை செய்தனர். அப்போது அதில் ஏராளமான மூட்டைகளில், ரேசன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. காரில் சுமார் 1,000 கிலோ ரேசன் அரிசி இருந்தது.

உணவு பொருள் கடத்தல் தடுப்பு

விசாரணையில் அந்த அரிசியை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கடத்தி கொண்டு செல்லப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்பு அதனை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். தப்பியோடிய கார் டிரைவர் யார்? இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com