முதல் 100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள்: தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் பிரசாரம்

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேட்பாளராக சத்தியபாமா போட்டியிடுகிறார்.
Dharapuram bypoll campaign - CM Vijay
Published on: 
Summary

தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகம் சார்பில் தாராபுரம் தொகுதியில் இன்று தேர்தல் பிரசாரம் நடைபெற்றது.

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேட்பாளராக சத்தியபாமா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தமிழக முதலரும், த.வெ.க கட்சியின் தலைவருமான ச. ஜோசப் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் தாராபுரம் தொகுதி மக்கள் உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம். கொங்கு நாட்டு சொந்தங்களே, நான் இங்கு உங்கள் வீட்டு உறவாக வந்திருக்கிறேன்.

ஊழலற்ற நிர்வாகம்

தமிழக வெற்றி கழக ஆட்சி அமைத்த சில நாட்களிலேயே, நாம் கொடுத்த வாக்குறுதிகளை சிறிது சிறிதாக நிறைவேற்றி வருகிறோம். த.வெ.க வாக்குறுதியான ஊழல், லஞ்சமற்ற நிர்வாகத்தினை முழு முனைப்போடு உறுதிப்படுத்தி வருகிறோம்.

அரசு பொறுப்பேற்ற பின், பள்ளிகள் மற்றும் ஆலயங்கள் அருகே இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிங்கப்பெண் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டு, 2546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

37 மாவட்டங்கள் மற்றும் 9 மாநகரங்களில் 65 போதைப் பொருள் தடுப்பு படை அமைத்து, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டு வருகிறது.

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது.

13 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நெல்லுக்கு ஊக்கத்தொகை முன்னெப்போதும் இல்லாத அளவில், உயர்த்தப்பட்டு சன்னரக நெல்லுக்கு குவிண்டால் 2750 ரூபாயாவும், பொதுரக நெல்லுக்கு குவிண்டால் 2600 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

பால் கொள்முதல்

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது; தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக முழுவதும் மகளிர் இலவசமாக பயணிக்க வெற்றி பயணம் மாநிலம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

கியாஸ் சிலிண்டர் திட்டம்

ஆண்டு 3 சிலிண்டர்கள் வழங்கும் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம், வரும் பொங்கல் முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. குடும்பத்திற்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை 5 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 70 வயது மேற்பட்ட சுமார் 38 லட்சம் குடிமக்களுக்கு வருமான உச்சவரம்பின்றி கட்டணமில்லா இலவச சிகிச்சை வழங்கும் வகையில், முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அம்மா உணவகங்கள்

630 அம்மா உணவகங்கள் சீரமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மகளிர் தொழில் முனைவோருக்காக சிங்கப்பெண் கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 1850 கோடி ரூபாய் மதிப்பில் நகர்ப்புற சாலை மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

முதல் 100 நாட்களில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 1,06,998 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com