

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 2,895 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியது. ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட விதிமீறல்களை தடுக்க 10 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, முக்கிய இடங்களில் தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கோவையில் பிற மாநில மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகிறார்கள். இதுதவிர இங்குள்ள கல்லூரிகளிலும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் பஸ்களிலும், ரெயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதையொட்டி கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 2,895 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்கள் இயக்கம் இன்று தொடங்கியது.
சிங்காநல்லூர் பஸ்நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 1,210 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சூலூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கரூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இங்கிருந்து 350 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், ஈரோடு, சேலம், திருப்பூருக்கு செல்ல 4 நாட்களுக்கு 610 பஸ்கள் இயக்கப்படுகிறது. உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து 110 பஸ்கள் பொள்ளாச்சி, உடுமலை, பழனி, பாலக்காடு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது.
இதேபோல மேட்டுப்பாளையம் பஸ்நிலையத்தில் இருந்து திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல் செல்லும் பயணிகளின் வசதிக்காக 110 பஸ்கள், சாய்பாபா காலனியில் உள்ள புதிய பஸ்நிலையத்தில் இருந்து ஊட்டி, குன்னூர், கூடலூர் செல்பவர்களுக்காக 195 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு 310 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இதேபோல கோவையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களை கொடிசியா மைதானத்தில் இருந்து மட்டுமே இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதற்காக கொடிசியா மைதானத்தில் தற்காலிக பஸ்நிறுத்தம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் எளிதில் அங்கு செல்லும் வகையில் காந்திபுரத்தில் இருந்து கொடிசியாவுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. அனைத்து பஸ்நிலையங்களிலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் தீபாவளியை ஒட்டி பர்மிட் இல்லாமல் இயங்குதல், அதிக கட்டணம் வசூலித்த உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க கோவை சரகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் 10 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காந்திபுரம், கொடிசியா மைதானம், கணியூர் சுங்கச்சாவடி, அவினாசி ரோடு, திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட இடங்களில் பறக்கும் படையினர் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆம்னி பஸ்கள் விதிமீறல் குறித்து மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. புகாரில் உண்மை இருந்தால் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.