

புதிய நடை மேம்பாலத்துடன் தொடர்புடைய 10 நகரும் படிகளை அமைக்கும் பணிகளும், நடைமேடைகளுக்கும் மேம்பாலத்திற்கும் இடையே நடமாட்டத்தை எளிதாக்கும் வகையில் முன்னுரிமை அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
தெற்கு ெரயில்வேயின் சென்னை கோட்டம், தாம்பரம் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் முக்கியப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறது.
அணுகல்தன்மை, பயணிகளின் வசதி மற்றும் ஒட்டு மொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் கூடுதல் மின் தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தாம்பரம் ெரயில் நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் அதிக உடைமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளுக்காக, மேல்தளங்களுக்குச் செல்லும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
நடைமேடைகள், மேம்பாலங்கள் மற்றும் ரெயில் நிலைய நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளுக்கு இடையே பாதுகாப்பான, வசதியான மற்றும் தடையற்ற நடமாட்டத்தை உறுதி செய்வதே தற்போது நடைபெற்று வரும் பணிகளின் முக்கிய நோக்கமாகும். நடைபெற்று வரும் உள் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக, புதிய நடை மேம்பாலத்தின் மூலம் நடைமேடைகளை ரெயில் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளுடன் இணைக்கும் வகையில் மொத்தம் 9 கூடுதல் மின் தூக்கிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மின் தூக்கிகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. அதனைச் சென்றடைவதற்கான நடைபாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த மின் தூக்கிகள் பயணிகளின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடைமேடைகள் 1, 2, 3, 4, மற்றும் 9, 10 ஆகியவற்றில் தலா ஒன்றும், கிழக்கு நுழைவு வாயிலில் 2 என மொத்தம் 5 மின் தூக்கிகள் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்து உள்ளன. விரைவில் பயணிகளின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட உள்ளன.
நடைமேடைகள் 5, 6 மற்றும் 7,8-ல் 2 மின் தூக்கிகள். இவற்றை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பர் மாதம் இறுதிக்குள் இவை பயன் பாட்டிற்குக் கொண்டு வரப்படுகிறது.
புதிய நடை மேம்பாலத்துடன் தொடர்புடைய 10 நகரும் படிகளை அமைக்கும் பணிகளும், நடைமேடைகளுக்கும் மேம்பாலத்திற்கும் இடையே நடமாட்டத்தை எளிதாக்கும் வகையில் முன்னுரிமை அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
மேற்கு நுழைவு வாயிலில் இரண்டும், நடைமேடைகள் 3, 4-ஐ இணைக்கும் வகையில் இரண்டும், மற்றும் நடைமேடைகள் 9, 10-ஐ இணைக்கும் வகையில் ஒன்றும் உரிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நகரும் படிக்கட்டுகள் அடுத்த மாதம் பயணிகளின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும்.
மீதமுள்ள 5 நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் நடைமேடைகள் 1, 2 மற்றும் 5, 6 ஆகியவற்றை இணைக்கும் வகையில் தலா ஒன்றும், கிழக்கு நுழைவு வாயிலில் ஒன்றும், நடைமேடைகள் 7, 8-ஐ இணைக்கும் வகையில் இரண்டும் அடங்கும்.
இந்த நகரும் படிக்கட்டுகள் டிசம்பர் மாதம் இறுதிக்குள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.
தற்போது நடைபெற்று வரும் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்தவுடன், தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஏற்கனவே உள்ள வசதிகளையும் சேர்த்து மொத்தம் 10 மின் தூக்கிகள் மற்றும் 16 நகரும் படிக்கட்டுகள் பயன்பாட்டில் இருக்கும். இது ெரயில் நிலையம் முழுவதும் அணுகல்தன்மையையும் பயணிகளின் நடமாட்டத்தையும் கணிசமாக மேம்படுத்தும்.
தாம்பரம் ரெயில் நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் வசதியான கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கும், சிறப்பான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்கும் சென்னை கோட்டம் தொடர்ந்து செயல்படுகிறது.