

போலீஸ் ஏட்டு வேல்முருகனின் துணிச்சலான நடவடிக்கைக்கு மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி, கோவை சரக டி.ஐ.ஜி. சுவாமிநாதன், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். அமைச்சர்கள் சம்பத்குமார், விக்னேஷ், கமலி ஆகியோர் வேல்முருகனை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டினர். இதுதவிர பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
கோவையை அடுத்த கோவில்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ், ஏட்டு வேல்முருகன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை கோவில்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.
சோதனை
அப்போது காரின் பின்புறத்தில் மூட்டை மூட்டையாக பொருட்கள் இருப்பதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் சோதனையிட முயன்றார். உடனே காரில் இருந்து இறங்கிய 3 பேர் திடீரென்று அவரை தள்ளிவிட்டனர். பின்னர் காரில் ஏறி அதிவேகமாக தப்பிச்செல்ல முயன்றனர்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸ் ஏட்டு வேல்முருகன் காரை மறிக்க முயன்றார். ஆனால் அவர்கள் காரை நிறுத்தாமல் செல்வதுபோல் வந்தனர். உடனே ஏட்டு வேல் முருகன் தாவிக்குதித்து காரின் மேற்கூரை கம்பியை பிடித்து தொங்கினார். பிறகும் அவர்கள் காரை நிறுத்தாமல் தொடர்ந்து வேகமாக ஓட்டிச்சென்றனர்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ், வயர்லஸ் மூலம் அவினாசி உள்ளிட்ட போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே கும்பலின் கார் கணியூர் சோதனை சாவடி நோக்கி சென்றது. அந்த காரில் பாஸ்டேக் ஸ்டிக்கர் இருந்ததால் சோதனைச்சாவடி தடுப்புதானாக திறந்தது.
இதனால் கடத்தல் கும்பலின் கார் நிற்காமல் தொடர்ந்து வேகமாக சென்றது. ஆனாலும் காரின் மேற்கூரை கம்பியை பிடித்த ஏட்டு வேல்முருகன் தொங்கியபடி சென்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள், காரில் ஏட்டு தொங்கியபடி செல்வதை தங்களது செல்போன்களில் பதிவு செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கணியூர் போலீசார், ஆம்புலன்ஸ் நண்பர்கள் குழுவுடன் இணைந்து கடத்தல் கும்பலின் காரை துரத்தி சென்றனர். மேலும் அவினாசி போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவினாசி போலீசாரும் கடத்தல் காரை எதிர்நோக்கி விரைந்தனர். மேலும் போலீசார் நெடுஞ்சாலையில் கார்களை நிறுத்தி செயற்கையாக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி கோவில்பாளையத்தில் இருந்து அவினாசி வரை சுமார் 30 கி.மீ. தூரம் சென்ற கடத்தல் கும்பல் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது. உடனே அவர்களை துரத்தி வந்த போலீஸ் வாகனங்கள் கடத்தல் கும்பலின் காரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.
காரில் இருந்த 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். அதில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அதன்பிறகு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மற்ற 2 பேரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் சன்சூர் மாவட்டத்தை சேர்ந்த பாபு தாரா (வயது 27), மர்மீர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (23), ஜாலர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (20) என்பதும், அவர்கள், பெங்களூருவில் இருந்து 300 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து நீலம்பூர் அருகே கார்த்திபுரம் பகுதியில் புகையிலை பொருட்களை மறைத்து வைத்து இருப்பதாக கடத்தல் கும்பல் தெரிவித்தது. உடனே கடத்தல் கும்பலை சேர்ந்த ராஜேஷ், சுரேஷ் ஆகியோரை போலீசார் அங்கு அழைத்து சென்றனர். அங்கு சென்றதும் தப்பி ஓட முயன்ற அவர்கள் 2 பேரும் தவறி கீழே விழுந்தனர். இதில் ராஜேசின் வலது கை, சுரேசின் இடது கையும் முறிந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் சூலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும், 300 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். சினிமா பாணியில் போலீஸ் ஏட்டு கடத்தல் கும்பலின் காரில் தொங்கியபடி 30 கிலோ மீட்டர் தூரம் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
போலீஸ் ஏட்டு வேல்முருகனின் துணிச்சலான நடவடிக்கைக்கு மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி, கோவை சரக டி.ஐ.ஜி. சுவாமிநாதன், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். அமைச்சர்கள் சம்பத்குமார், விக்னேஷ், கமலி ஆகியோர் வேல்முருகனை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டினர். இதுதவிர பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே குறுத்தங்குளம் கிராமம் ஆகும். 2011-ஆண்டு காவல்துறையில் சேர்ந்தேன். மாவட்ட அளவிலான கபடி அணியில் பங்கேற்று உள்ளேன். எனது உடன் பிறந்த சகோதரர் முனியசாமி விருதுநகரில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். கோவில்பாளையம் பகுதியில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தோம். அப்போது சந்தேகத்திற்கு கிடமாக வந்த 3 பேர் வந்த காரை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் தடுக்க முயன்றார். இதில் அவரது கை கண்ணாடியில் சிக்கிக் கொண்டது. உடனே நானும் காரை பிடித்தபோது எனது கையும் சிக்கிக்கொண்டது. பின்னர் கையை விடுவித்து கொண்டேன். இதற்கிடையே கார் வேகமாக செல்லத் தொடங்கியது. ஆனாலும் கடத்தல் கும்பலை பிடிக்க வேண்டும் என்பதால் உயிரை துச்சமென கருதி காரின் மேற்கூரை கம்பியை பிடித்தேன்.
அதன்பிறகும் அந்த கும்பல் காரை வேகமாக ஓட்டியது. ஆனாலும் 30 கிலோ மீட்டர் தூரம் காரில் மேற்கூரையில் இருந்தபடி சென்றேன். காரில் தொங்கியபடி செல்லும்போது கடத்தல் கும்பலை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்குள் இருந்தது.
அவினாசி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சோதனைச்சாவடி பகுதியில் போலீசார், பொதுமக்களின் உதவியுடன் கடத்தல் கும்பலின் காரை மடக்கிப்பிடித்தோம். இதற்காக அனைத்து தரப்பினரும் எனக்கு பாராட்டு தெரிவித்து வருவது மகிழ்ச்சியும், ஊக்கமும் அளிப்பதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.