தமிழக பா.ஜ.க. முதல் தலைவர் கே.நாராயண்ராவ் காலமானார்: தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி

தமிழக பா.ஜ.க.வின் முதல் தலைவராக இருந்த கே.நாராயண்ராவ் சென்னையில் நேற்று காலமானார். அவரது உடலுக்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கே.நாராயண்ராவ்
கே.நாராயண்ராவ்
Published on

சென்னை:

தமிழக பா.ஜ.க.வின் முதல் தலைவராக இருந்தவர் கே.நாராயண்ராவ். இவர் மேற்கு தாம்பரத்தில் வசித்து வந்தார். சில கல்வி நிறுவனங்களையும் நடத்தி வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலை அவர் காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கே.நாராயண்ராவ் உடலுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம், செய்தி தொடர்பாளர் பிரசாத், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட தலைவர் மோகனராஜா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் பா.ஜ.க. தொண்டர்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘கே.நாராயண்ராவ் மறைவு தமிழக பா.ஜ.க.வுக்கு ஒரு பேரிழப்பு. அவருக்கு தமிழக பா.ஜ.க. தனது அஞ்சலியை செலுத்துகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ஜனசங்கம் காலம் தொட்டு இன்றளவும் என்னை போன்ற பலருக்கு வழிகாட்டியாக இருந்த நாராயண்ராவ் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரின் குடும்பத்திற்கும், கல்வி குழுமத்தை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இல.கணேசன் எம்.பி. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘தீனதயாள் உபாத்யாய, அடல்பிகாரி வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களுடன் மிகுந்த அன்போடு நெருங்கி பழகியவர். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், கல்வி குழும நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த கே.நாராயண்ராவ் தமிழக பா.ஜ.க.வின் முதல் தலைவராக 1980-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி பொறுப்பேற்றார். 1985-ம் ஆண்டு வரை அந்த பொறுப்பில் இருந்தார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் பணியாற்றினார். 5 திரைப்படங்களையும் அவர் தயாரித்துள்ளார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com