

நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் பாளையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் தமிழ் தாமரை யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து அப்பகுதியில் உள்ள பிரச்சனைகளை மனுவாக தயாரித்து அதிகாரிகளிடமும், முதல்வரிடமும் வழங்கி வருகிறோம். பா.ஜனதா கட்சி வளர்ச்சிக்காக 5 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் என்ற முறையில் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம்.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது, மானூர் பெரிய குளத்திற்கு நிரந்தரமாக தண்ணீர் கொண்டு வருவது, மாஞ்சோலையில் 3 ஆயிரம் தோட்ட தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வது, நெல்லை மாநகர ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்ந்தெடுத்த பின்னரும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றப்படாமல் இருப்பதை சரி செய்வது உள்ளிட்ட பிரச்சனைகளை மனுவாக கொடுக்க உள்ளோம்.
தமிழகத்தை பொறுத்த வரை பா.ஜனதா ஒரு மாற்று சக்தியாக திகழும். தேர்தல் நேரத்தில் இது வெளிப்படும். ரஜினிகாந்த் பேசும் போது, ‘தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், அதை தான் நிரப்ப போவதாகவும் கூறினார். அந்த வெற்றிடத்தை நாங்கள் மட்டுமே நிரப்புவோம்’ என்ற நம்பிக்கையுடன் செயலாற்றி வருகிறோம். எங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது.
நாங்கள் 22 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறோம். இங்குள்ள பிரச்சனைகளை மத்திய-மாநில அரசுகளிடம் எடுத்து கூறி நிறைவேற்றுவோம். மாநில அரசு நல்லது செய்தால் பாராட்டுவோம். தவறு செய்தால் சுட்டிக் காட்டுவோம்.
தி.மு.க. காவிரி பிரச்சனையை தவறாக கையாண்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என நிதின் கட்காரி கூறவில்லை. ஆனால் இதை தி.மு.க.வினர் தவறாக செய்தி பரப்புகின்றனர். தற்போது கூட காவிரி பிரச்சனை பற்றி பேச 4 மாநில கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. பா.ஜனதா தமிழக உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. திரிபுராவில் பா.ஜ.க. வெற்றி கொண்டாட்டத்தின் போது லெனின் சிலையை அகற்றியது போல தமிழகத்தில் வெற்றி பெற்று பெரியார் சிலையை அகற்றுவோம் என எச்.ராஜா கூறியது அவரது சொந்த கருத்து. அதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் போராடுவது தேவையற்றது.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews