ஹசன் அலி, நவ்மன் அலி அபார பந்து வீச்சு - 2வது டெஸ்டில் ஜிம்பாப்வே அணி திணறல்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், நவ்மன் அலி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டும் வீழ்த்தினர்.
5 விக்கெட் வீழ்த்திய ஹசன் அலி
5 விக்கெட் வீழ்த்திய ஹசன் அலி
Published on

பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹராரேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 147.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 510 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அபித் அலி 215 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அசார் அலி 126 ரன்னிலும், நவ்மன் அலி 97 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஜிம்பாப்வே சார்பில் முசாராபனி 3 விக்கெட்டும், சிசோரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் முடிவில் ஜிம்பாப்வே 30 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில், நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 60.4 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் பாலோ-ஆன் ஆனது. அந்த அணியில் சகாப்வா அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 5 விக்கெட்டும், சஜித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, ஜிம்பாப்வே இரண்டாவது இன்னிங்சை ஆடியது. இதிலும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அசத்தி விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினர்.

ஆனாலும், சகாப்வா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 80 ரன்னில் அவுட்டானார். பிரெண்டண் டெய்லர் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மூன்றாம் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 63 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்துள்ளது. லூக் ஜாங்வே 30 ரன்னுடன் களத்தில் உள்ளார். இன்னும் 158 ரன்கள் பின்தங்கியுள்ளது ஜிம்பாப்வே அணி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com