கோவில்பட்டியில் வாலிபர் குத்திக்கொலை

கோவில்பட்டியில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

கோவில்பட்டி:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள தேவநல்லூரை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 34). தொழிலாளி. இவரது மனைவி முத்துலெட்சுமி (30).

இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் கோவில்பட்டி ஏ.கே.எஸ். தியேட்டர் சாலையில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு கோவில்பட்டி ஏ.கே.எஸ். தியேட்டர் சாலையில் ராம்குமார் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

சம்பவ இடத்திற்கு மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் மற்றும் கோவில்பட்டி மேற்கு போலீசார் விரைந்து சென்று ராம்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை தொடர்பாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் ராம்குமார் சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அப்போது ஆத்திரமடைந்த ஒரு வாலிபர் ராம்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தியது கேமிராவில் பதிவாகி இருந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கோவில்பட்டி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (50). இவர் கோவில்பட்டி தெற்கு பஜாரில் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் முத்துலெட்சுமி வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் முத்துலெட்சுமியின் நடத்தையில் ராம்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் ராம்குமார் மது போதையில் நேற்று இரவு வ.உ.சி. நகரில் உள்ள வெங்கடாச்சலம் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் வீட்டுக்கு சென்றார். இதையறிந்த வெங்கடாச்சலத்தின் உறவினர் கோபிநாத்தும், அவரது நண்பரும் ராம்குமார் வீட்டிற்கு சென்று அவரை கண்டித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் வீட்டிற்கு நடந்த சென்று கொண்டிருந்த போது அங்கு சென்ற ராம்குமார் மீண்டும் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த கோபிநாத் கத்தியால் அவரை குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக வெங்கடாச்சலத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து கோபிநாத் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com