மனைவியுடன் சிரித்து பேசியதால் ஆத்திரம்- தொழிலாளி குத்திக்கொலை

சென்னை புதுப்பேட்டையில், மனைவியுடன் சிரித்து பேசிய தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரும் கைதானார்.
கொலை
கொலை
Published on

சென்னை:

சென்னை புதுப்பேட்டை எல்.ஜி. சாலையில் பிளாட்பாரத்தில் வசித்து வந்தவர் சந்தோஷ்குமார் (வயது 33). இவர் மீன்பாடி வண்டி ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். இவரது மனைவி இறந்து விட்டார். மகனை தனது சகோதரி வீட்டில் விட்டு விட்டார். தனியாக இருந்த இவர் தினமும் வேலை முடிந்த பிறகு புதுப்பேட்டை பழைய சித்ரா தியேட்டர் அருகில் பிளாட்பாரத்தில் தூங்குவார்.

இந்தநிலையில் நேற்று காலையில் சந்தோஷ்குமார், கத்தியால் குத்தப்பட்ட நிலையில், ரத்தவெள்ளத்தில் அவரது மீன்பாடி வண்டியில் கிடந்தார். இதுபற்றி எழும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் ஷேட்டு ஆகியோர் சந்தோஷ்குமாரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து போனார்.

இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்து எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில், சந்தோஷ்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்தது, அதே புதுப்பேட்டை பகுதியில் பிளாட்பாரத்தில் வசிக்கும் இளவரசன் (21) மற்றும் அருண் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் குப்பை தொட்டிகளில் பழைய பேப்பர் பொறுக்கும் தொழில் செய்துவந்தனர்.

இவர்களில் இளவரசனின் மனைவியிடம் சந்தோஷ்குமார் அடிக்கடி சிரித்து பேசிக்கொண்டிருப்பாராம். இது இளவரசனுக்கு பிடிக்கவில்லை. என் மனைவியிடம் ஏன்? சிரித்து பேசுகிறாய் என்று இளவரசன், சந்தோஷ்குமாரிடம் சண்டை போடுவாராம். இதை பொருட்படுத்தாமல், சந்தோஷ்குமார் தொடர்ந்து இளவரசனின் மனைவியிடம் பேசி, பழகி வந்துள்ளார்.

இதனால் கோபம் கொண்ட இளவரசன், தனது நண்பர் அருணுடன் சேர்ந்து, சந்தோஷ்குமாரை கத்தியால் குத்தி தீர்த்துக்கட்டி விட்டார். இந்த தகவலை போலீஸ் விசாரணையில் இளவரசன் வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com