ஏலச்சீட்டு நடத்தியவர் கண் முன்பு தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

ஏலச்சீட்டு பணத்தை திருப்பி தராததால் சீட்டு நடத்தியவர் கண் முன்பு தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்கும் பதறவைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலசுப்பிரமணியன்
பாலசுப்பிரமணியன்
Published on

விக்கிரமசிங்கபுரம்:

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் சிவந்திபுரம் கஸ்பா புதுமனை தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 49), தச்சு தொழிலாளி. இவருக்கு மாரியம்மாள் (44) என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

சிவந்திபுரம் வராகபுரம் கீழ காந்தி நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற மில் தொழிலாளி மரியசெல்வம் (64). இவருடைய மனைவி அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மரியசெல்வம் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 2015-ம் ஆண்டு பாலசுப்பிரமணியன் ரூ.1 லட்சத்துக்கான ஏலச்சீட்டில் சேர்ந்தார். இதற்காக பாலசுப்பிரமணியன் மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தார். இதற்கிடையே தவணைக்காலம் முடிந்ததும், மரியசெல்வம் ரூ.1 லட்சம் முதிர்வு தொகையை பாலசுப்பிரமணியனிடம் வழங்காமல் இழுத்தடித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் பாலசுப்பிரமணியனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மரியசெல்வத்தின் வீட்டுக்கு நேரில் சென்று பணத்தை கேட்க முடியாத நிலை இருந்தது. பின்னர் பாலசுப்பிரமணியனுக்கு சற்று குணமடைந்ததும், அவர் இதுகுறித்து கடந்த 2018-ம் ஆண்டு விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மரியசெல்வத்திடம் மாதந்தோறும் ரூ.1,500-ஐ பாலசுப்பிரமணியனுக்கு வழங்குமாறு கூறினர். ஆனாலும் மரியசெல்வம் பணத்தை வழங்காமல் காலம் கடத்தி வந்தார். பின்னர் அவர், தீபாவளி தினத்தில் சீட்டு பணத்தை தருவதாக பாலசுப்பிரமணியனிடம் கூறினார்.

இதனால் தீபாவளி அன்று காலை 7 மணி அளவில் மரியசெல்வத்தின் வீட்டுக்கு சென்று பாலசுப்பிரமணியன் சீட்டு பணம் கேட்டார். ஆனால் மரியசெல்வம் சீட்டுப்பணத்தை கொடுக்காமல் பின்னர் தருவதாக கூறினார். இதனால் மனமுடைந்த பாலசுப்பிரமணியன் தயாராக பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். மரியசெல்வம் கண் முன்னே இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

இதில் உடல் கருகி பலத்த காயம் அடைந்த பாலசுப்பிரமணியனுக்கு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரியசெல்வத்தை கைது செய்தனர்.

இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் தீக்குளித்து தற்கொலை செய்த காட்சி, மரியசெல்வத்தின் வீட்டின் முன்புள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த காட்சியில், ஏலச்சீட்டு பணத்தை பாலசுப்பிரமணியன் கேட்கிறார். பணம் தர மறுக்கப்பட்டதால், பாலசுப்பிரமணியன் பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொள்கிறார். ஆனால் மரியசெல்வம் சற்றும் அசராமல், உயிரோடு பற்றி எரியும் பாலசுப்பிரமணியனை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காமல், தனது மோட்டார் சைக்கிளில் தீ பற்றிவிடக்கூடாது என்பதற்காக அதை பத்திரமாக பாதுகாப்பான இடத்துக்கு தள்ளி சென்றுள்ளார்.

இந்த சம்பவம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com