வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் - கடைசி நாளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 285 ரன்கள் தேவை

வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் கைவசம் 7 விக்கெட் வைத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற இன்னும் 285 ரன்கள் தேவைப்படுகிறது.
சதமடித்த மொமினுல் ஹக்
சதமடித்த மொமினுல் ஹக்
Published on

சட்டோகிராம்:

வங்காளதேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 430 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் சதம் (103) விளாசினார். ஷத்மான் இஸ்லாம் 59 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 68 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 259 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கேப்டன் பிராத்வைட் சிறப்பாக விளையாடி 76 ரன்கள் எடுத்தார். ஜெர்மைன் பிளாக்வுட் 68 ரன்களும், கைல் மேயர்ஸ் 40 ரன்களும், ஜோஷுவா டி சில்வா 42 ரன்களும் எடுத்தனர்.

வங்காளதேச அணி சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டும் தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

171 ரன்கள் முன்னிலைப் பெற்ற வங்காளதேசம் 2-வது இன்னிங்ஸ் ஆடியது. 3-வது நாள் ஆட்ட முடிவில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், நான்காவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. கேப்டன் மொமினுல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 115 ரன்னில் அவுட்டானார். விக்கெட் கீப்பர் லித்தன் தாஸ் அரை சதமடித்து 69 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.

இறுதியில், வங்காளதேசம் 2வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கார்ன்வால், வாரிகன் தலா3 விக்கெட்டும், கேப்ரியல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 395 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

நான்காம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுக்கு110 ரன்கள் எடுத்துள்ளது. பானர் 15 ரன்னுடனும்,  கைல் மேயர்ஸ் 37 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

கடைசி நாளான இன்று கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ள நிலையில், வெற்றிக்கு தேவையான 285 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி எடுக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com