கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்ட போது எடுத்த படம்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்ட போது எடுத்த படம்.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

ஏரியில் மீன் வளர்ப்பதற்கு தடை விதிக்கக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் க.அலம்பலம் மற்றும் பொன்பரப்பட்டு கிராமங்களுக்கு சொந்தமான பொதுப்பணித்துறை ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

சமீபத்தில் பெய்த பருவமழையால் ஏரி நிரம்பி வழிகிறது. இதையடுத்து ஏரி பாசனம் மூலம் தற்போது 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற் பயிர் நடவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் க.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் கிராம மக்கள் அனுமதி இல்லாமல் ரகசிய பேரம் பேசி பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏரியில் மீன் வளர்ப்புக்கு மீன் குஞ்சு விடுவதற்கு வலை கட்டியுள்ளார்.

இதனால் க.அம்பலம் கிராமத்திற்கும் மற்றும் பொன்பரப்பட்டு கிராம மக்களுக்கும் இடையே சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும் ஏரியை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்கள் அழியும் அபாய நிலை உள்ளதால் ஏரியில் மீன்வளர்க்க பொன்பரப்பட்டு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து ஏரியில் மீன் வளர்க்க தடை விதிக்கக்கோரி பொன்பரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com