ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டும் அமைச்சர்- விரைவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு

ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் வகையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஜெயலலிதாவுக்காக கோவில் கட்டி வருகிறார். இன்னும் சில வாரங்களில் பணிகள் முடிக்கப்பட்டு ஜெயலலிதா கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா
ஜெயலலிதா
Published on

மதுரை:

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள டி.குன்னத்தூர் அருகே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் வகையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஜெயலலிதாவுக்காக கோவில் கட்டி வருகிறார்.

இந்த கோவிலில் 21 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு ஜெயலலிதாவின் பிரமாண்ட சிலையும், எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கல சிலையும் நிறுவப்படுகிறது.

பொதுமக்கள் அமரும் வகையில் மண்டபமும் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில வாரங்களில் பணிகள் முடிக்கப்பட்டு ஜெயலலிதா கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்டு வரும் கோவில் பணிகளை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று பார்வையிட்டார். அவருடன் அவரது தந்தை போஸ், தாயார் மீனாள் மற்றும் பலர் இருந்தனர்.

இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

மக்கள் நலனே தன் நலன் என்று மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து ஒரு தியாக தீபமாக வாழ்ந்த ஜெயலலிதா, 1½ கோடி தொண்டர்களின் குலதெய்வமாக திகழ்ந்து வருகிறார்.

அ.தி.மு.க. இன்னும் 100 ஆண்டுகாலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா லட்சிய முழக்கமிட்டார்.

அந்த லட்சிய முழக்கங்களை இன்றைக்கு நமது முதல்வரும், துணை முதல்வரும் அடிபிறழாமல் நிறைவேற்றுகின்றனர். இந்த இயக்கம் நிச்சயம் இன்னும் நூறு ஆண்டுகாலம் மக்கள் பணியாற்றும். ஏனென்றால் அம்மாவின் வாக்கு நிச்சயம் பலிக்கும்.

எங்களது குடும்பத்தாரும் குல தெய்வமாக அவரை வழிபட்டு வருகிறோம். அந்த தெய்வத்திற்கு தற்போது எங்களது குடும்பத்தார் சார்பில் கோவில் கட்டி வருகிறோம்.

இந்த கோவிலில் அனைத்து மக்களும் வழிபடும் வண்ணம் அதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பணி விரைவில் முடிவுற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com