தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்- ஒருநபர் ஆணையத்தின் 23வது கட்ட விசாரணை

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின் 23-வது கட்ட விசாரணை நடந்தது. நாளை வரை இந்த விசாரணை நடக்கிறது.
நீதிபதி அருணா ஜெகதீசன்
நீதிபதி அருணா ஜெகதீசன்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணைய அதிகாரி மாதந்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தார்.

இதில், ஏற்கனவே 22 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 544 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 679 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டன.

23-வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 14-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் தூத்துக்குடி தென்பாகம், மத்தியபாகம், வடபாகம் போலீஸ் குடியிருப்புகளில் உள்ள 47 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

இதில் நேற்று மதியம் வரை 23 பேர் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தனர். தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) வரை விசாரணை நடக்கிறது. ஏற்கனவே, விசாரணையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஆணைய வக்கீல் தெரிவித்து இருந்தார். அதன்படி, தற்போது ஏராளமானோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com