ராஜஸ்தானில் சுரங்கம் தோண்டி வெள்ளிப்பொருட்களை அள்ளிய பலே திருடர்கள்

ராஜஸ்தானில் டாக்டர் வீட்டின் அடியில் சுரங்கம் தோண்டி அதிலிருந்த வெள்ளிப்பொருட்களை பலே திருடர்கள் தூக்கிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர், டாக்டர் சுனித் சோனி. இவர் தலைமுடி மாற்றும் சிகிச்சை மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.

சுனித் சோனி தனது வீட்டில் தரைக்கு அடியில் ஒரு பிரமாண்ட பெட்டியில் வெள்ளிப் பொருட்களை புதைத்து வைத்து இருந்திருக்கிறார்.

இந்நிலையில், வெள்ளிப் பொருட்கள் புதைக்கப்பட்டிருந்த இடம் வரை சுரங்கம் தோண்டிய திருடர்கள், பெட்டியை உடைத்து வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றுவிட்டனர்.

சுமார் 20 அடி நீளம், 15 அடி ஆழம் கொண்ட அந்தச் சுரங்கம், டாக்டர் வீட்டின் நேர் பின்னால் உள்ள வீட்டில் இருந்து தோண்டப்பட்டிருக்கிறது.

அந்த வீட்டை கடந்த ஜனவரி மாதம் ரூ.87 லட்சத்துக்கு விலைக்கு வாங்கிய திருடர்கள், அதன் சுற்றுச்சுவர்களை ஒட்டி பெரிய தகரங்களை வைத்து அடைத்து, உள்ளே நடப்பது வெளியில் உள்ளவர்களுக்குத் தெரியாதவண்ணம் மறைத்திருக்கின்றனர். பின்னர் சுரங்கம் தோண்டத் தொடங்கியிருக்கின்றனர்.

இவ்வாறு மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் செயல்பட்டு, வெள்ளிப் பொருட்களை அள்ளிச் சென்றிருக்கின்றனர்.

இந்த திருட்டைத் தொடர்ந்து, வீட்டின் தரைத்தளம் சமமற்று இருப்பதைக் கண்ட டாக்டர், அதன் பின்னர்தான் வெள்ளிப்பொருட்கள் திருடுபோனதை உணர்ந்திருக்கிறார். கடந்த புதன்கிழமையன்று போலீசில் புகார் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளிப்பொருட்கள் இருந்த பெட்டியுடன், மேலும் இரு காலி பெட்டிகளையும் அந்த டாக்டர் புதைத்து வைத்திருந்திருக்கிறார். ஆனால் அவ்வாறு காலி பெட்டிகளை புதைத்து வைத்தது ஏன் என்று அவர் போலீசிடம் கூறவில்லை. திருடு போன வெள்ளிப் பொருட்களின் மொத்த மதிப்பு எவ்வளவு என்றும் அவர் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், வௌ்ளிப்பொருட்களை டாக்டர் புதைத்து வைத்திருந்ததை அறிந்த அவரது நண்பர் ஒருவர் இந்த திருட்டில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். நகை வியாபாரியான அவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் 4 பேருக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறும் போலீசார், அவர்களை தேடி வருகின்றனர்.

வெளியுலகம் தெரியாமல் வெள்ளி பொருட்களை மறைத்து வைத்திருந்த டாக்டருக்கு கடுக்காய் கொடுத்துவிட்டனர், ‘கில்லி’ திருடர்கள்!

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com