சேலத்தில் கைது செய்யப்பட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் வீட்டில் விடிய விடிய சோதனை

சேலத்தில் கைது செய்யப்பட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் வீட்டில் விடிய விடிய சோதனையில் கட்டு கட்டுகளாகக பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
Published on

சேலம்:

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 57). இவர் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 53 பேரூராட்சிகளுக்கு உதவி இயக்குனராக உள்ளார்.பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்படும் துப்புரவு பணி, குடிநீர், தெருவிளக்கு உள்பட எலக்ட்ரிக் உபகரண பராமரிப்பு பணிக்கு செலவு செய்யப்படும் தொகைக்கு இவரே அனுமதி அளிப்பார்.

இவருக்கு சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு வழங்கிய காரில் சென்று பேரூராட்சி எல்லை பகுதிகளில் வசூலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அந்த பணத்தை தினமும் கோவைக்கு எடுத்து செல்வதை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டு பிடித்தனர்.

இதையடுத்து நேற்றிரவு வழக்கம் போல சேலத்தில் இருந்து கோவைக்கு காரில் சென்ற போது சேலம் லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி. சந்திரமவுலி தலைமையில் போலீசார் அரியானூரில் ஜீப்பை மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது 2 பைகளில் கணக்கில் வராத 3.5 லட்சம் ரூபாய் இருந்தது. இதையடுத்து அவரை வின்சென்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து இரவு முழுவதும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்களை கூறினார்.

இதையடுத்து கோவையில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்து பெரிய நாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனை விடிய விடிய நடந்தது.

இதில் கட்டு கட்டுகளாகக பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் அவரை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com