

திருச்சி:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன பெருக்கத்தின் காரணமாக சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும் அவ்வப்போது நடைபெறும் விபத்துக்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
சாலை விபத்துக்களை தடுக்கும் நோக்கில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி விபத்துக்களின் எண்ணிக்கை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி மாவட்டம் வடமாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்கள் செல்வதற்கு முக்கிய போக்குவரத்து வழித்தடமாக உள்ளது. திருச்சியை சுற்றி உள்ள நெடுஞ்சாலைகளில் திருச்சி-மதுரை, திருச்சி-திண்டுக்கல், திருச்சி-கரூர், திருச்சி-சென்னை, திருச்சி-புதுக்கோட்டை, திருச்சி-தஞ்சை உள்ளிட்ட சாலைகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன. இந்த வாகனங்கள் அதிவேகத்தில் பயணிக்கும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு, கொத்துக்கொத்தாக பலியாகும் சம்பவங்களும் அதிகமாகிறது. இதேபோல் மாநகர பகுதியிலும் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுகிறது.
திருச்சி மாநகரத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சாலை விபத்துக்களில் 104 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருச்சி புறநகரில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சாலை விபத்துக்களில் 227 பேர் உயிரிழந்துள்ளனர். 1,447 பேர் காயமடைந்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 166 பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். 1,328 பேர் காயமடைந்துள்ளனர். ஆக மொத்தம் திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 331 பேரும், இந்த ஆண்டு இதுவரை மட்டும் 246 பேரும் உயிரிழந்து உள்ளனர்.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருப்பினும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகமாக விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து அங்கு விபத்துக்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு திருச்சி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.