வெள்ளியணையில் அரசு அனுமதியின்றி செயல்பட்ட தனியார் காப்பகத்தில் இருந்து 20 குழந்தைகள் மீட்பு

தொடக்கப்பள்ளி அரசு அனுமதியுடனும், குழந்தைகள் காப்பகம் அரசின் உரிய அனுமதி பெறாமலும் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
தனியார் காப்பகத்தில் ஆய்வு முடித்து விட்டு அதிகாரிகள் வெளியே வந்தபோது எடுத்த படம்.
தனியார் காப்பகத்தில் ஆய்வு முடித்து விட்டு அதிகாரிகள் வெளியே வந்தபோது எடுத்த படம்.
Published on

வெள்ளியணை:

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள செல்லாண்டிபட்டி பகுதியில் தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. அதே பகுதியில் இந்த காப்பகத்தை நடத்தி வரும் தனியார் தொண்டு நிறுவனத்தின் அரசு அனுமதி பெற்ற தொடக்கப்பள்ளியில் இங்கு தங்கியிருந்த குழந்தைகள் கல்வி பயின்று வந்தனர். மேலும் உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளில் படிக்க அருகிலுள்ள வெள்ளியணை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இங்குள்ள குழந்தைகள் சென்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கரூர் மாவட்டத்திற்கு ஆய்வுக்கு வந்த தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி, ஆணைய உறுப்பினர் மருத்துவர் ராமராஜ் ஆகியோர் தலைமையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், நன்னடத்தை அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட முதன்மை மற்றும் தொடக்க கல்வி, சமூக நலத்துறை அலுவலர்கள் கொண்ட குழுவினருடன் நேற்று மாலை செல்லாண்டிபட்டி சென்று இந்த தனியார் காப்பகத்தையும் தொடக்கப் பள்ளியையும் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தொடக்கப்பள்ளி அரசு அனுமதியுடனும், குழந்தைகள் காப்பகம் அரசின் உரிய அனுமதி பெறாமலும் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும் கொரோனா காலத்தில் காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளை தங்க வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அக்குழந்தைகளை அதிகாரிகள் மீட்டனர்.

மேலும், மாவட்டத்தில் உள்ள அரசு அனுமதி பெற்ற காப்பகத்தில் மீட்கப்பட்ட குழந்தைகளை தங்க வைக்கவும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களை சமூக நலத்துறை மூலம் வேறு விடுதிக்கு அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்தனர். மேலும் பள்ளி சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க அதன் நிர்வாகிக்கு உத்தரவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com