

புதுடெல்லி:
அலோபதி மருந்துகள் மற்றும் அலோபதி மருத்துவமுறை குறித்து பாபா ராம்தேவ் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
பதஞ்சலி நிறுவன தலைவரான அவர் இதுதொடர்பாக கூறும்போது, “தற்போது கடைப்பிடிக்கப்படும் அலோபதி மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமானது. இந்த பெருந்தொற்று காலத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் மக்கள் உயிரை காப்பாற்றுவதில் இருந்து தோல்வி அடைந்து விட்டன. அலோபதி மருந்துகளாலும், மருத்துவத்தாலும் லட்சக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம்” என்று கூறினார்.
பாபா ராம்தேவின் இந்த குற்றச்சாட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் கோரிக்கை விடுத்தது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்த்தன் யோகா குரு பாபா ராம்தேவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
இதைத்தொடர்ந்து அலோபதி மருந்து குறித்த தனது கருத்தை பாபா ராம்தேவ் திரும்பபெற்றார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “பல்வேறு மருத்துவ முறைகள் குறித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கிறேன். அதற்கு ஏற்ற வகையில் அலோபதி மருந்து குறித்த எனது கருத்தை வாபஸ் பெறுகிறேன்” என்றார்.
இந்தநிலையில் அலோபதி நிரந்தர நிவாரணம் அளிக்குமா? என்று இந்திய மருத்துவர்கள் சங்கத்துக்கு (ஐ.எம்.ஏ.) பாபா ராம்தேவ் 25 கேள்விகளை எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஐ.எம்.ஏ.வுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் 25 கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
உயர் ரத்த அழுத்தம், முதல் வகை மற்றும் 2-வது வகை நீரிழிவுக்கு அலோபதி நிரந்தர நிவாரணம் அளிக்குமா? தைராய்டு, கீழ்வாதம், பெருங்குடல் அழற்சி மற்றும் ஆஸ்துமாவுக்கு மருந்தியியல் துறையில் நிரந்தர சிகிச்சை உள்ளதா?
காச நோய் மற்றும் சின்னம்மைக்கு நீங்கள் சிகிச்சை கண்டறிந்தது போல் கல்லீரல் பாதிப்புகளுக்கு சிகிச்சை கண்டறியுங்கள்.
அலோபதி மருத்துவம் 200 ஆண்டுகள் மட்டுமே பழமையானது. இதய ரத்த குழாய் அடைப்புக்கு அறுவை சிகிச்சை அல்லாத தீர்வு அலோபதி மருத்துவத்தில் என்ன உள்ளது.
கொழுப்பை குறைக்க என்ன சிகிச்சை இருக்கிறது? ஒற்றை தலைவலிக்கு சிகிச்சை உள்ளதா?
இவ்வாறு ராம்தேவ் கேள்விகளை எழுப்பி உள்ளார்.
அலோபதி மருத்துவமுறை குறித்து பாபா ராம்தேவ் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் பதிலடி கொடுக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.