அரசியலில் நமது இலக்கை எட்ட உள்ளாட்சியில் வென்றே தீர வேண்டும் - ராமதாஸ் அறிக்கை

தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிப்பது நாம் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிப்பதற்கான வாய்ப்பு இந்த உள்ளாட்சி தேர்தல் என ராமதாஸ் கூறியுள்ளார்.
ராமதாஸ்
ராமதாஸ்
Published on

சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வன்னிய மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.50 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்தது வரலாற்றுச் சாதனையாகும். இந்த இட ஒதுக்கீடு சும்மா கிடைத்து விடவில்லை; இடைவிடாத போராட்டங்களின் மூலமே சாத்தியமானது.

நாம் வென்றெடுத்துக் கொடுத்த சமூகநீதியின் மூலம் ஓராண்டில் 6000 பேர் மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்கப்பட்டால் அவர்களில் குறைந்தது 630 பேர் வன்னியர்களாக இருப்பார்கள். ஓராண்டில் 10 ஆயிரம் அரசு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களில் 1050 பேர் வன்னியர்களாக இருப்பார்கள்.

ஒரு காலத்தில் வன்னியர்கள் அரசு அலுவலகங்களில் நுழையவே முடியாத சூழல் இருந்தது. ஆனால், இப்போது வன்னியர்கள் இல்லாமல் அரசு அலுவலகங்கள் இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்திய விடுதலைக்குப் பிந்தைய 75 ஆண்டுகளில் இது சாத்தியமாகவில்லை. நாம் போராடாவிட்டால் இன்னும் 7,500 ஆண்டுகள் ஆனாலும் இந்த நிலை மாறியிருக்காது. எந்தக்கட்சி ஆட்சி செய்தாலும் வன்னியர்களுக்கு தானாக முன்வந்து சமூகநீதியை வழங்கியிருக்க மாட்டார்கள்.

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் எவரும் காத்துக்கொண்டு இருக்கவில்லை. அதற்கான கட்டாயத்தை ஏற்படுத்தியதால் தான் வழங்கினார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் வலிமையும், போராட்டங்களும் தான் இதை சாத்தியமாக்கின.

வன்னியர்களுக்கு மட்டும் தான் என்றில்லை... அனைத்து சமுதாயங்களுக்கும் அனைத்து நிலைகளிலும் ஏராளமான நன்மைகளை நாம் செய்திருக்கிறோம். சமூகநிலையிலும், கல்வியிலும் பின்தங்கிய நிலையில் இருந்த இஸ்லாமியர்களுக்கும், அருந்தியர்களுக்கும் உள் ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்தது பா.ம.க. தான் என்பதை அந்த சமுதாயத்தினர் நன்றாக அறிவார்கள்.

உள்ளூர் அளவில் ஏற்படும் பிரச்சினையாக இருப்பினும், மாநில அளவில் ஏற்படும் சிக்கலாக இருந்தாலும் அதை பாட்டாளி மக்கள் கட்சியால் தான் தீர்க்க முடியும் என்று அனைத்து மக்களும் நம்மை நாடி வருவதே நம் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு சாட்சி.

நம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தான் நமது சொத்து ஆகும். ஆகையால் உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், அவர்களுக்காக பணியாற்றும் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் வீடு வீடாக சென்று நமது சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும்;

பா.ம.க. வெற்றி பெற்றால் தான் உள்ளாட்சிகளில் நல்லாட்சி மலரும் என்பதை விளக்க வேண்டும். அதன் மூலம் மக்களின் உள்ளங்களை வெல்ல வேண்டும்; உள்ளாட்சிகளில் வெற்றியை அள்ள வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல்கள் மற்ற கட்சிகளை விட நமக்கு மிகவும் முக்கியமாகும். தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிப்பது நாம் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிப்பதற்கான வாய்ப்பு இந்தத் தேர்தல் ஆகும்.

தமிழ்நாட்டு அரசியலில் நமது இலக்கு மிகவும் உயர்ந்தது. அந்த இலக்கை நோக்கிய நமது பயணத்தை விரைவுபடுத்த இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டியது மிகவும் அவசியம். வெற்றி மட்டும் தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும்.

இதை உணர்ந்து பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் கடுமையாக உழைத்து வெற்றிக் கனியை பறித்து வரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com